பராமரிப்பு இல்லாத கோவில் குளம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
பள்ளிப்பட்டு; பராமரிப்பு இன்றி சீரழிந்து கிடக்கும் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம், அத்திமாஞ்சேரிப்பேட்டையில் உள்ள கல்யாண சுந்தரேசனார் கோவிலை ஒட்டி பழமையான குளம் உள்ளது. இந்த கோவில் குளக்கரையை ஒட்டி வார சந்தை நடக்கிறது. சந்தையில் குவியும் குப்பை மற்றும் சுற்றுப்பகுதியில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், காற்றில் பறந்து குளத்தில் தேங்குகின்றன. இதனால் குளக்கரையும், படிக்கட்டுகளும் குப்பைகளால் சூழப்பட்டு சீரழிந்து காணப்படுகின்றன. குப்பைகளில் செடிகளும் முளைக்கத் தொடங்கியுள்ளதால் குளத்தின் தூய்மையும், அழகும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, குளத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை உடனடியாக அகற்றி, கோவில் குளத்தை தூய்மையாக பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.