ஒட்டன்சத்திரம் அருகே 15ம் நுாற்றாண்டு நடுகல் கண்டெடுப்பு
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே முத்துநாயக்கன்பட்டி – பொன் காளியம்மன் புதுார் ரோடு குளக்கரையில் உள்ள மண்டபத்தில் 15ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது.
திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக்குழு விஸ்வநாததாஸ் கூறியதாவது: இந்த நடுகல்லில் போர்வீரன் குதிரை மீது அமர்ந்து வலது கையில் வாளை தலைக்கு மேல் ஓங்கிய நிலையில் இடது கையில் குதிரை கடிவாளத்தை பிடித்தபடி உள்ளார். தலையில் மகுடம், வலது புறம் சரிந்த கொண்டை, காதில் குண்டலம், கழுத்தணி, கை கால்களில் கங்கணம், இடுப்பில் உதரபந்தனம், இடையணி முழங்கால் வரை உள்ளது. வீரனின் மனைவி கொண்டை சரிந்து காதணி, கையில் வளை, வலது கையில் தீப்பந்தம் துாக்கிப்பிடித்த நிலையிலும், இடது கையில் மது குடுவையுடனும் உள்ளார். இடையாடை கெண்டைக்கால் வரை சுருண்டு அணிந்து நிற்கிறார். வாளை துாக்கிய நிலை போரில் வீரன் சண்டையில் இறந்ததை குறிக்கிறது. பெண் கையில் தீப்பந்தம் பிடித்திருப்பது அவள் சிதையில் தீக்குளித்ததை குறிக்கிறது. குதிரையின் அலங்காரம் வீரன் இப்பகுதி குறுநில மன்னனாக இருந்ததை குறிக்கிறது. வீரனின் தலைக்கு மேல் சூரியன் சந்திரனும் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல் 15 அல்லது 16ம் நுாற்றாண்டை சேர்ந்தது. இதனை இப்பகுதி மக்கள் குதிரை கல் என வணங்கு கின்றனர் என்றார்.