ஆடி முதல் வெள்ளி; கோவை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
கோவை: ஆடி மாதப் பிறப்பு மற்றும் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கோவையில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், விசேஷ அபிஷேகங்களும் நடந்தன. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நாகராணி அலங்காரத்தில் காட்சிதந்த பொன்னையராஜபுரம் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பெரியகடை வீதி, மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு வெற்றிலை, பாக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இளம்பச்சை பட்டாடையில், சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த போத்தனுார் ரயில்வே காலனி மாரியம்மனுக்கு மகா தீபாரதனை நடந்தது.
ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்மாள் மற்றும் அன்னபூரணேஸ்வரி கோவில்கள், காட்டூர் நாகப்பன் வீதியில் உள்ள விளையாட்டு மாரியம்மன் கோவில், அவிநாசி ரோடு தண்டுமாரியம்மன் உள்ளிட்ட பல கோவில்களிலும் அம்மனுக்குச் பட்டாடை மற்றும் தங்க ஆபரண அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. அம்மன் கோவில்களில் நாள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்களுக்கு கூழ், பொங்கல், தாலிச் சரடு, குங்குமம், வளையல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.