மானாமதுரை முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி உற்சவ விழா
மானாமதுரை: மானாமதுரை கன்னார் தெரு முத்துமாரியம்மன் கோயில் 158ம் ஆண்டு பொங்கல் மற்றும் முளைப்பாரி உற்சவ திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் மற்றும் முளைப்பாரி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.இதனை தொடர்ந்து விரதமிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தினம்தோறும் முளைப்பாரி தின்னை முன்பாக கும்மி பாட்டு பாடி சுவாமியை வழிபட்டனர்.நேற்று காலை பொங்கல் விழாவை முன்னிட்டு மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து அலகு குத்தி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர். பின்னர் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர்.கோயில் அருகே அன்னதானம் நடந்தது.இன்று முளைப்பாரி உற்சவமும்,நாளை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.