ஆடிப்பெருக்கு; ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் நம்பெருமாள்
திருச்சி: ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் ரங்கநாத பெருமாள், காவிரி அன்னைக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. காலை அம்மா மண்டபம் நோக்கி வந்த நம்பெருமாள் காவிரிக் கரையில் எழுந்தருளி, நாள் முழுவதும் பக்தர்களுக்கு ரங்கநாதர் அருள்பாலித்து, காவிரி அன்னைக்கு சீர் கொடுப்பதும் இன்று மிக சிறப்பானதாகும்.
ஆடிப்பெருக்கு விழா காவிரி கரையோர பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலைலேயே வந்து புனித நீராடினர். தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஆடி, 18ம் பெருக்கு பண்டிகை. ஆடிப்பெருக்கு பண்டிகை காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் அதிகாலை, 4 மணி முதலே மக்கள் கூட்டம் வரத்துவங்கியது. திருமணமான பெண்கள், புதுமண தம்பதியர், கன்னி பெண்கள் என அனைவரும் முளைப்பாரி, மங்கல பூஜை பொருட்கள், திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகள் ஆகியவற்றை எடுத்து வந்திருந்தனர். காவிரியில் நீராடி புத்தாடை அணிந்து முளைப்பாரி, திருமண மாலைகளை காவிரி ஆற்றில் விட்டனர். பின் படித்துறையில் வாழை இலை போட்டு, அதில் பச்சரிசி, மஞ்சள், குங்குமம், வெல்லம், தேங்காய், பூ, பழம் வைத்து பூஜை செய்து காவிரிக்கு கற்பூர ஆரத்தி காட்டி குடும்பத்துடன் வணங்கினர்.