ஆடிப்பட்டம் செழிக்க நீர்நிலை வழிபாடு கோவில்களில் சிறப்பு பூஜை
உடுமலை: நீர்நிலைகள் நிரம்பி, ஆடிப்பட்டம் செழிக்கவும், ஆடிப்பெருக்கு தினத்தை உடுமலை சுற்றுப்பகுதி மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். அமராவதி ஆறு உள்ளிட்ட நீர்நிலை கரைகளில், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், ஆடிப்பெருக்கு தினம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆடி மாதத்தின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு தினமாக கொண்டாடப்படுகிறது.
அமராவதி ஆற்றின் கரையோரத்திலுள்ள கிராமங்கள் மற்றும் திருமூர்த்திமலைப்பகுதியில், பாரம்பரிய முறையில் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, விவசாயிகள் சாகுபடிக்கு தயாராக வைத்துள்ள நெல் உள்ளிட்ட தானியங்களில் விதைகளை, முளைப்பாலிகையாக இட்டு வைத்திருந்தனர்.
ஆடிப்பெருக்கு தினமான நேற்று, அமராவதி ஆற்றில் முளைப்பாலிகையை விட்டு வழிபாடு செய்தனர். ஆற்றின் கரையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, அவுல், சர்க்கரை, கல்கண்டு, பொரி மற்றும் உணவு பண்டங்களை படையலிட்டு, நீர் வழிபாடு செய்தனர்.
தாமரை, தலைவாழை இலையில் விளக்கு வைத்தும், நீர் வழிபாடு மேற்கொண்டனர். புதுமணத்தம்பதிகளுக்கு விருந்தும், புத்தாடையும் கொடுத்தும், புது சரடில் தாலிச்சரடு மாற்றியும், முன்னோர்கள் வழிபாடு என நீர் வளம், நில வளம், உயிரினங்கள் வாழ்வு வளம் வேண்டி வழிபடும் பாரம்பரிய விழாவாக கொண்டாடினர்.
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, ஆடிப்பெருக்கு தினமான நேற்று, சுற்றுப்புற பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
தோணியாற்றின் கரையில் எழுந்தருளியுள்ள மும்மூர்த்திகளை வழிபட்டும், ஆற்றில் விளக்கு, முளைப்பாலிகை விட்டு நீர் வழிபாடு மற்றும் முன்னோர்களுக்காக வழிபாடு நடத்தினர். புதுமணப்பெண்கள் தாலிச்சரடு மாற்றியும் வழிபட்டனர்.
ஆடிப்பெருக்கு தினமான நேற்று, ஆடிக்காற்றை வரவேற்கும் வகையில், கிராமங்களில் மரங்களில் துாரி கட்டி, விளையாடி மகிழ்ந்தனர். அனைத்து வளங்களும் பெருக கொண்டாடப்படும், ஆடிப்பெருக்கு தினத்தில், கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.
எஸ்.வி., புரம் ஸ்ரீ சபரி ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரி பூஜை நடந்தது. உடுமலை மாரியம்மன் கோவில், கொழுமம் கோட்டை மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.