துர்கை அம்மன் கோவிலில் ஒரு லட்சம் வளையல்களில் அம்மனுக்கு அலங்காரம்
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு துர்கை அம்மன் கோவிலில் ஒரு லட்சம் வளையல்களை வைத்து அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
சக்தி வழிபாட்டிற்குரிய ஆடிபூரம் விழாவில் உலக நன்மை வேண்டியும், குடும்ப வளம் பெருகவும் புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் வளையல்களால் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. வளைகாப்பு நடத்தி மகிழும் நன்னாளாகவும் போற்றப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் துர்கை அம்மன் கோவிலில் இன்று ஒரு லட்சம் வளையல்கள் வைத்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தன. இந்த வளையல்கள் அனைத்தும் வரலட்சுமி தினமான வரும் வெள்ளிக்கிழமை அன்று பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. விழாவையொட்டி விவேகானந்தா நற்பணி மன்றம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.