நேபாளத்தில் இடர்பாடுகளில் சிக்கியவர்கள் நலமுடன் திரும்ப கூட்டு வழிபாடு
மயிலாடுதுறை; நேபாள் இயற்கை பேரிடர்- தருமபுரம் ஆதீனத்தில் கூட்டு பிரார்த்தனை. இடர்பாடுகளில் சிக்கியவர்கள் நலமுடன் இல்லம் திரும்பவும், நேபாள் நாட்டில் இயல்பு நிலை திரும்பவும், மறைந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கோளறு பதிகம் நெடுங்குளம் இடற்களையும் பதிகம் பாடப்பட்டு பிரார்த்தனை நடைபெற்றது. ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் உறவினர் பங்கேற்று மனம் உருகி பிரார்த்தனை செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் திருமடத்தில் நேபாளத்தில் நடந்த இயற்கை சீற்றத்தின் காரணமாக இடர்பாடுகளில் நலமுடன் இல்லம் திரும்பவும் நேபாள் நாடு இயல்பு நிலைக்கு திரும்பவும், பேரிடரில் மறைந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் கூட்டு வழிபாடு நடைபெற்றது. சொக்கநாதர் பூஜை மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சொக்கநாதரை வழிபாடு மேற்கொண்டு குத்துவிளக்கில் தீபம் ஏற்றினார். தொடர்ந்து மயிலாடுதுறையில் இருந்து நேபாள் சுற்றுலா சென்று சிக்கிக்கொண்ட ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்ட அனைவரும் நலமுடன் வீடு திரும்ப வேண்டியும் திருஞானசம்பந்தரின் கோளறு பதிகம், நெடுங்குளம் இடர் களையும் பதிகம் பாடப்பட்டது. தொடர்ந்து அனைவரும் இரண்டு நிமிடம் மௌனம் அனுசரித்தனர். இதில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானத்தின் உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மனமுருக பிரார்த்தனை செய்தனர்.