உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பிள்ளையார்பட்டி: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்தி விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. செப்., 13 ல் தேரோட்டமும், 14 ல் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.


இங்கு பத்து நாட்கள் சதுர்த்தி பெருவிழா நடைபெறும். இன்று காலை 10:40 மணிக்கு மூஷிக கொடிபடம், சண்டிகேஸ்வரர் கோயிலை வலம் வந்து கொடி மரம் எழுந்தருளினர். தொடர்ந்து உற்ஸவர், அங்குச தேவர் கொடி மரம் எழுந்தருளினர். சிவாச்சாரியார் பிச்சை குருக்கள், சோமசுந்தரம், ஸ்ரீதர் சிறப்பு பூஜைகள் செய்தனர். கொடிமரம், அஸ்திரதேவருக்கு  அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பரம்பரை அறங்காவலர்கள் கோனாப்பட்டு பழ. அரு. ராமசாமி, அரிமளம் செ.நா.கண்ணன் முன்னிலையில் காலை 11:40 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதி உலா வந்தார். இன்று, இரண்டாம் திருநாள் முதல் எட்டாம் திருநாள் வரை காலை 9:30 மணிக்கு வெள்ளி கேடகத்தில் விநாயகர் புறப்பாடு, தினசரி இரவில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், யானை, மயில், குதிரை வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். செப்.10 மாலையில் கஜமுக சூரசம்ஹாரம், செப்.,13 மாலையில் தேரோட்டம் நடைபெறும். அன்றைய தினம் ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியளிப்பார். இதனை பக்தர்கள் மாலை 4:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை தரிசிக்கலாம். செப்.14 ல் தீர்த்தவாரி உற்சவமும், மதியம் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையல், இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடுடன் நிறைவு பெறும். திருவிழா காலங்களில் தினமும் மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, பரதம், கர்நாடக இசை கச்சேரி நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !