மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் சிருங்கேரி சுவாமிகளுக்கு அழைப்பு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.,17 நடப்பதை முன்னிட்டு அழைப்பு விடுத்து, சிருங்கேரி ஜகத்குரு பாரதீ தீர்த்த சுவாமிகள் மற்றும் விதுசேகர பாரதீ மகா சுவாமிகளிடம் கோயில் அதிகாரிகளும் அர்ச்சகர்களும் ஆசிபெற்றனர்.
700 ஆண்டுகளுக்கு முன் அன்னியர்கள் கோயில்களை சிதைத்து தர்மத்தை அழிக்க முற்பட்ட சூழலில், சிருங்கேரி சாரதா பீடத்தின் 12வது சங்கராசாரியார் வித்யாரண்ய சுவாமிகள் ஹரிஹரர் மற்றும் புக்கர் அரசர்கள் மூலம் விஜயநகரப் பேரரசை ஸ்தாபித்து தர்மத்தை காப்பாற்றினார். அந்த அரசர்கள் அன்னியர்களை வீழ்த்தி கோயில்களை காப்பாற்றி பூஜைகள் தவறாமல் நடக்க ஏற்பாடுகளைச் செய்தனர்.
புக்கரின் மகன் குமார கம்பண்ணர் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், மதுரை உள்ளிட்ட கோயில்களில் தடைபட்டிருந்த வழிபாடுகள் தொடர ஏற்பாடு செய்தார். அவரது கனவில் மீனாட்சி அம்மன் தோன்றி தன் கோயிலில் பூஜைகள் தடைப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அதை சரிசெய்ய சொன்னது வரலாறு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சிருங்கேரி மடத்திற்கு சென்று, சுவாமிகளுக்கு அறநிலையத்துறை, கோயில் சார்பில் அறங்காவலர் பி.கே.எம். செல்லையா, உதவிகமிஷனர் மெய்வேல் சீனிவாசன், சிவாச்சாரியார்கள் சண்முகசுந்தரம், கார்த்திகேயன் முறைப்படி அழைப்பு விடுத்தனர். அவர்களிடம் ‘சாதுர்மாஸ்ய விரத அனுஷ்டானத்தில் இருப்பதால் வரவாய்ப்பு இல்லை. பின்னர் அம்மனை தரிசிக்க வருகிறேன்’ என சுவாமிகள் ஆசி வழங்கினார்.