உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவம்

தமிழகம் முழுவதும் கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவம்

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் உள்ள தீப்பாஞ்ச நாச்சியாரம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி, கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. முதல் நாள் பூஜை பெட்டியுடன் நகர்வலம் வந்து சங்கரகனம் நடந்தது. மாலை மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, பஞ்சாசன பஞ்சமாவர்ண பூஜை, வேதபாராயணம், லலிதா சகசர நாம அர்ச்சனை, எந்திர ஸ்தாபனம் நடந்தது. இரவு அஷ்டபந்தனம் மருந்து சான்றுதல் நடந்தது. நேற்று காலை மகாபூர்ணகுதி தீபாராதனையுடன், யாகசாலை கடங்கள் புறப்பாடு, அதை யடுத்து, கும்பாபிஷேகம் நடந்தது.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே ராதானுார் சவுந்தர நாயகி சமேத திருவிருந்தீஸ் வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக முதல் மூன்று கால யாகசாலை பூஜைகளும், வாஸ்து சாந்தி பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து நேற்று காலை விநாயகர் பூஜை, கோமாதா பூஜை நடைபெற்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாக சாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் சிவாச்சாரியார்களால் ஊர்வலமாக கோயில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர்களுக்கு புனித நீரில் அபிஷேகம் நடத்தப்பட்டு தீபா ராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ராஜ வளநாடு ராதானுார் கிராம மக்கள் செய்திருந்தனர். சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அன்னுார்


அக்கரை செங்கப்பள்ளி அருகே காரனூரில், அரச மர வேம்பு விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன், பத்ரகாளியம்மன், நாட்ராயன், நாச்சிமுத்து கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் மாலை விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் முளைப்பாளிகை ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். இரவு முதற்கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு மாரியம்மன் கோவில், விமான கலசங்களுக்கும், அரச மர வேம்பு விநாயகர், பத்ரகாளியம்மன், மாகாளியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தர்மகர்த்தா ரவி தலைமையில், ஓதிமலை செந்தில்நாதன் குழுவினர் யாகசாலை பூஜைகளை நடத்தினர். தொழிலதிபர் ஆறுமுகசாமி உட்பட ராமே கவுண்டனுார், காரனுர், தொட்டியபாளையம், செலம்பர கவுண்டன் புதுார் பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 12 நாட்கள் மண்டல பூஜை நடக்கவுள்ளது.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி நந்தவன சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷகம் செப்.16 அதிகாலை 5:30 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 7:35 மணிக்கு மேல் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. பூர்ணாஹூதி பூஜை நிறைவு பெற்றபின் காலை 10:40 மணியளவில் புனித நீர் கொண்டு கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சித்தி விநாயகர், பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், தீபாராதனை வழிபாடுகள், அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

கிணத்துக்கடவு: குருநல்லிபாளையம், ஸ்ரீதேவி பூதேவி சமேத பாலகொண்டராயிடு பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கிணத்துக்கடவு, குருநல்லிபாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத பாலகொண்டராயிடு பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 2ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த, 15ம் தேதி, தீர்த்த குடம் எடுத்தல், மங்கள இசையுடன் சுவாமி திருவீதி உலா, முதற்கால வேள்வி, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம், 16ம் தேதி, இரண்டாம் கால வேள்வி, பீட சக்தி பூஜை, நாடி சந்தானம், கலசம் புறப்பாடு, பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தீபாராதனை, மகா அபிஷேகம், அலங்கார வழிபாடு நடந்தது.

பெங்களூர்

தங்கவயல்: உரிகம் எலக்ட்ரிக்கல் காலனியில் அமைந்துள்ள சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் நேற்று அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 15 – 17ம் தேதி வரை சிறப்பு பூஜைகள், ஐதீக முறைப்படி சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. நேற்று, காலை 5:30 மணிக்கு துவங்கி, நான்காம் கால யாக பூஜை, கலசம் புறப்பாடுடன், காலை 8:30 மணிக்கு மூலவர் மற்றும் பரிவாரங்களுக்கு மஹா கும்பாபிஷேகமும், தீர்த்த பிரசாத விநியோகமும் நடந்தது.

திருத்தணி

திருத்தணி பாப்பாத்தியம்மன் கோவிலில், நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். திருத்தணி நகாரட்சி, காந்தி சாலை இரண்டாவது தெருவில், பழமை வாய்ந்த பாப்பாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து, நேற்று முன்தினம் கணபதி, நவகிரக ஹோமங்களுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதற்காக, கோவில் வளாகத்தில் மூன்று யாக சாலைகள், 108 கலசங்களை வைத்து, லட்சுமி பூஜை, கோ பூஜை மற்றும் கும்ப அலங்காரம், யாகசாலை பூஜை ஆகியவற்றை சிவாச்சாரியார்கள் செய்தனர். நேற்று காலை 8:30 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு, கோவில் விமான கோபுரத்தில் புனித நீர் ஊற்றி மகா அபிஷேகம் நடந்தது. பின், தீபாராதனை நடந்த பின், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும், கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட துர்க்கை அம்மன், விநாயகர், பாலமுருகன் மற்றும் நவகிரக சிலைகளுக்கும் கலச நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் மற்றும் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாரதனையும் நடந்தது. இதில், திருத்தணி முன்னாள் தி.மு.க., – எம்.எல்.ஏ., சந்திரன் உட்பட, 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, காந்தி சாலை இரண்டாவது தெரு பொதுமக்கள் செய்திருந்தனர்.

திருப்பூர்


ஓம்சக்தி... பராசக்தி கோஷம் முழங்க... கரைப்புதுார் ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில்கள் மஹா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. பல்லடம், கரைப்புதுாரில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் விநாயகர், பாலசுப்ரமணியர் ஆகிய சன்னதிகளும், ஸ்ரீ முனீஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் இடம் பெற்ற கோவிலில், திருப்பணிகள் நிறைவு பெற்று, 23-ம் தேதி முகூர்த்தக்கால் நாட்டப்பட்டு, கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. கடந்த 15-ம் தேதி கணபதி ஹோமம், மஹாலட்சுமி கலச ஆவாஹணம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, ஸ்ரீலட்சுமி நகர் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாலிகை ஊர்வலம் நடந்தது. அன்று மாலை யாகசாலை பிரவேசம், விநாயகர் வழிபாடு மற்றும் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை விநாயகர் வழிபாட்டுடன் 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதன்பின், தீர்த்த கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 7:35 மணிக்கு விமான கோபுரம் மற்றும் பரிவார கும்பாபிஷேகமும், அதைத்தொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகமும் நடந்தது. கோபுர கலசங்கள் மீது புண்ணிய தீர்த்தங்களால், கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். குருக்கம்பாளையம் ஆதீனம் தியாகராஜசுவாமிகள், கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள் அருளாசி வழங்கினர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் குமாரசுப்ரமணிய சிவாச்சாரியார் குழுவினர் சர்வ சாதகம் நிகழ்த்தினர். கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு மற்றும் விழாக்குழுவினர் தலைமையில் ஊர் மக்கள் செய்திருந்தனர்.

வடமதுரை

வடமதுரை பிலாத்து அருகே பி.கம்பிளியம்பட்டி உப்புக்குளத்தில் மாட்டுக்கார முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று முன்தினம் தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபி ஷேகம் நடந்தது. வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர் தேவராஜன் தலைமையிலான குழுவினர் நடத்தினர். வேடசந்துார் எம்.எல்.ஏ., வீரா சாமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். கள்ளிமந்தையம்: கொத்தயத்தில் ஆறுமுகத்தம்மன், விநாயகர், கருப்புசாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், புண்ணிய தீர்த்தம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று ஆறுமுகத்தம்மன், விநாயகர், கருப்புசாமி தெய்வங்களுக்கு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களால் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சின்னாளபட்டி

சின்னாள பட்டி பைபாஸ் ரோட்டில் சந்தன கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், மூலிகை வேள்வியுடன் யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம், பொங்கல் வழிபாடு நடந்தது.

அச்சிறுபாக்கம்

உத்தமநல்லுார் செல்லியம்மன், தண்டு மாரியம்மன், பொன்னியம்மன் மற்றும் ஆப்பூர் துலுக்காணத்தம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசையாக நேற்று நடந்தது.
உத்தமநல்லுார் கிராமத்தில் பழமை வாய்ந்த செல்லியம்மன், தண்டு மாரியம்மன், பொன்னியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவிலில், சில ஆண்டுகளாக திருப்பணி மேற்கொண்டனர். திருப்பணிகள் முடிந்ததை அடுத்து, கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள், கடந்த 16ம் தேதி தொடங்கின. தொடர்ந்து, கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை நடந்தன. நேற்று காலை 9:00 மணிக்கு செல்லியம்மன் கோவில் கோபுர விமானத்திற்கும், 9:15 மணிக்கு மூலவருக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின், 9:30 மணிக்கு தண்டு மாரியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கும், பொன்னியம்மன் கோபுர காலத்திற்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், உத்தமநல்லுார் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

சிங்கபெருமாள் கோவில்

சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் கிராமத்தில் பழமையான துலுக்காணத்தம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜை, கோ பூஜை உள்ளிட்டவையும், நேற்று காலை கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. இதையடுத்து, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆப்பூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

மானாமதுரை

மானாமதுரைஅருகே மூங்கில்ஊரணி கல்லுக்கோட்டை ஆதி முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இங்கு 2 நாட்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நான்கு கால யாக சாலை பூஜைக்கு பின் நேற்று பூர்ணாகுதி நடந்தது. சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கி கடங்களை ஏந்தி கோயில் வளாகத்தில் வளம் வந்தனர். கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். விழா கமிட்டியினர் ஏற்பாட்டை செய்தனர்.

சங்கராபுரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் கிராமத்தில் சீத்தாலட்சுமி சமேத ராமசந்திரமுர்த்தி மற்றும் பக்த ஆஞ்சநேயர் கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன் தினம் யாகசாலை வேள்வி பூஜைகள் நடந்தது. திருக்கோவிலுார் நாராயண பட்டாச்சாரியார் குழுவினரால் விநாயகர், நாகராஜர் கரிக்கோல ஊர்வலம் நடந்தது. பின் யந்திர பிரதிஷ்டை, பிம்ப ஸ்தாபணம்,அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை மகாசாந்தி ஹோமம்,கலச ஸ்தாபணம்,வாஸ்து பூஜைகள், கும்ப ஆராதனை, பூர்ணாகுதி நடந்தது. பின் கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் தொடர்ந்து கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரகணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா வெங்கடேச பாகவதர் செய்திருந்தார்.சங்கராபுரம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கச்சிராயபாளையம்

மண்மலை ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவிலில் நேற்று மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. கச்சிராயபாளையம் அடுத்த மண்மலை, கந்தசாமி குன்றின் மீது ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கிருந்த பழைய கோவிலை அகற்றிவிட்டு புதிதாக கோவில் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. கோவில் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் நேற்று மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. அதிகாலை 6 மணிக்கு மங்கள இசை, வேதபாராயணம், பிரம்மசுத்தி தத்துவார்ச்சனை, நாடி சந்தனம் ஸ்பரஸ்யாஹீதி, மூல மந்திரஹோமம், அஸ்திர ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டது. தொடர்ந்து நான்காம் கால மஹா பூர்ணாஹீதி யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டது. தீபாராதனை செய்து கலச புறப்பாடாகி, காலை 10 மணியளவில் விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா, சுப்பிரமணியர், இடும்பன், கடம்பன், பாலதண்டாயுதபாணி ஆகிய கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ட்ரோன் மற்றும் தீயணைப்பு வாகனம் மூலம் பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கும் பாபிஷேக நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம்

விருத்தாசலம் அடுத்த அரசகுழியில் விநாயகர், முருகன், முத்து மாரியம்மன் கோவில்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, மாலை முதல்கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால பூஜை, தீபாராதனை நடந்தது. காலை 8:30 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்வுடன் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர், மூலவருக்கு கும்பாபிஷேகம், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.

புதுச்சத்திரம்


புதுச்சத்திரம் அடுத்த நயினார்குப்பம் வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதனையொட்டி, கடந்த 15ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், மாலை வாஸ்து பூஜை, பிரவேச பலி, முதற்கால யாக பூஜை, பூர்ணா ஹூதி தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாக பூஜை, விஷேச சாந்தி , பூர்ணாஹூதி தீபாராதனையு ம், மாலை மூன்றாம் கால யாக பூஜை, திரவியாஹூதி, மந்த்ரோபசாரம், தீபாராதனை, சிலைகள் மற்றும் கோபுர கலசங்களுக்கு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது. நேற்று காலை நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், திரவியாஹுதி, பூர்ணாஹூதி தீபாராதனையை தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 10:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விஸ்வநாதபுரம்

நெல்லிக்குப்பம் விஸ்வநாதபுரம் விஸ்வலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதனையொட்டி கடந்த 15ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹீதி, தீபாராதனையை தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து ஒரே சமயத்தில் செல்வ விநாயகர், விஸ்வலிங்கேஸ்வரர், திரவுபதி அம்மன், முத்துமாரியம்மன், முருகன், கெங்கையம்மன், வெள்ளந்தாங்கி ஐயனார், ஐயப்பன், ஆஞ்ச நேயர் கோவில்களின் கும்பாபிஷேகம் நடந்தது.

உடுமலை


உடுமலை தில்லை நகர், சீரடி ஆனந்த சாயி கோவில், மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. உடுமலை தில்லை நகரிலுள்ள, சீரடி ஸ்ரீ ஆனந்த சாயி கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று முன்தினம், காலை, 6:30 மணிக்கு, மங்கள இசையுடன் யாக சாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து கணபதி ஹோமம், மகா லட்சுமி ஹோமம், பாலிகை ஸ்தாபிதம் மற்றும் மாலை, 4:30 மணிக்கு, முதற்கால யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 5:00 மணிக்கு, கணபதி ஹோமம், வேத பாராயணம், இரண்டாம் கால யாக சாலை பூஜை, காலை, 7:30க்கு, யாத்ரா தானம், கலசம் புறப்பாடு நிகழ்ச் சிகள் நடந்தன. தொடர்ந்து, 8:10 மணிக்கு, விமான கும்பாபிஷேகம், 8:45 மணிக்கு, மூல மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. மேலும், பரிவார மூர்த்திகளான, ஸ்ரீ கன்னி மூல கணபதி, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீ ராம பக்த ஹனுமான் சுவாமிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், ஸ்ரீ ஆனந்த சாயி சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு மகா பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, சீரடி ஸ்ரீ ஆனந்த சாயி கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !