மேற்கு வங்கத்தில் களைகட்டும் துர்கா பூஜை கொண்டாட்டம்! பஞ்சமி நாளில் எங்கும் விழாக்கோலம்!
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை முன்னிட்டு கொல்கத்தா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வண்ணமயமான மின் விளக்குகளாலும், கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட துர்கா தேவி சிலைகளாலும், பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட பூஜை பந்தல்களாலும் ஜொலிக்கின்றன.
இந்த ஆண்டு மேற்கு வங்கம் முழுவதும் சுமார் 57,500 இடங்களில் துர்கா பூஜை நடைபெறுகிறது. இதில் கொல்கத்தாவில் மட்டும் 3,300-க்கும் மேற்பட்ட இடங்களில் பூஜை கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தி, பாரம்பரியம், கலைநயம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த விழாவில், துர்கா தேவியை வழிபட ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள வித்தியாசமான பந்தல்களும், பிரம்மாண்டமான அலங்காரங்களும் மக்களை வெகுவாகக் கவர்கின்றன. விழாவை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் காவல்துறை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளைப் பலப்படுத்தியுள்ளது. பக்தியும், பாரம்பரியமும், கலைக் கொண்டாட்டமும் சங்கமிக்கும் துர்கா பூஜை விழாவால் மேற்கு வங்கம் முழுவதும் உற்சாகம் களைகட்டியுள்ளது!