சென்னை லோக் பவனில் நவராத்திரி கொலு விழா: பக்தி இசை, பரதநாட்டியத்துடன் 4-ம் நாள் கொண்டாட்டம்!
சென்னை: சென்னை லோக் பவனில் நடைபெற்ற நவராத்திரி கொலு கொண்டாட்டத்தின் நான்காம் நாள் நிகழ்ச்சி, பக்தி உணர்வும் ஆன்மிகச் சிறப்பும் தமிழர்களின் பாரம்பரியக் கலைநயமும் இணைந்த விழாவாக அமைந்தது.
விழாவில், ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் சார்பில் பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. தொடர்ந்து, செல்வி சுசித்ரா பாலசுப்ரமணியனின் கர்நாடக இசைக் கச்சேரியும், சிவாஸ் அகாடமி ஆஃப் டான்ஸ் குழுவினரின் கருத்துச் செறிவுமிக்க பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன. இசையும் நடனமும் இணைந்த இந்த நிகழ்ச்சிகள், பார்வையாளர்களுக்கு ஆன்மிக அனுபவத்தை வழங்கின. இந்தியாவின் தொன்மையான ஆன்மிக மரபுகள், பக்தியின் மகத்துவம் மற்றும் பாரம்பரியக் கலை வடிவங்களின் முக்கியத்துவம் ஆகியவை நிகழ்ச்சிகளின் மூலம் எடுத்துரைக்கப்பட்டன. இந்தியாவின் கலாசாரப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதில் பக்தி, இசை மற்றும் செவ்வியல் கலைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை இந்தக் கொண்டாட்டம் எடுத்துக்காட்டியது. பக்தியும் இசையும் கலையும் சங்கமித்த நவராத்திரி கொலு விழா, தமிழ்நாட்டின் செழுமையான கலாசார மரபுகளைப் போற்றும் நிகழ்வாக அமைந்தது.