பழநி இடும்பன் கோயில் நகை திருடிய இருவர் கைது
பழநி: பழநி, சிவகிரிபட்டி, பைபாஸ் ரோடு அருகில் உள்ள இடும்பன் கோயிலில் திருடப்பட்ட தங்க, வெள்ளி நகைகள் மீட்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழநி, சிவகிரிபட்டி, பைபாஸ் சாலையில் திண்டுக்கல் ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆயக்குடி விக்னேஸ்வரா வகையறா கோயில்களின் ஒன்றான இடும்பன் கோயில் உள்ளது. இக்கோயில் செயல் அலுவலராக செயல்பட்ட விமலா பொறுப்புகளை ஒப்படைக்காமல் பணியிலிருந்து சென்றபின் செயல் அலுவலராக நரசிம்மன் பொறுப்பேற்றார். அவர் நகைகளை ஆய்வு செய்தபோது விக்னேஸ்வரா கோயிலுக்கு பாத்தியப்பட்ட மூன்று கிலோ வெள்ளி பொருட்கள், 20.5 பவுன் தங்க நகைகள் திருடபட்டது தெரிந்து 2026., மே 30ல் பழநி டவுன் போலீசில் புகார் அளித்தார். திண்டுக்கல் எஸ்.பி., ஜெயக்குமார் நேரடியாக விசாரணையில் ஈடுபட்டார். இதில் முன்னாள் செயல் அலுவலர் விமலா, கோயில் இடும்பன் கோயிலில் பணியில் இருக்கும் ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணையில் ஈடுபட்டார். இது தொடர்பாக தனிப்படை, டி.எஸ்.பி. தேவராஜ், இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையில் அமைக்கப்பட்டது. தொடர் விசாரணையில் கோயில் அலுவலகத்தில் தற்காலிகமாக பணிபுரிந்த ஊழியர் பாப்பம்பட்டி செந்தில்குமார், மகள் நிரஞ்சனா 25. அப்போதைய செயல் அலுவலர் விமலாவிடமிருந்து பெட்டகச் சாவியை எடுத்து, நகையை திருடியது தெரிந்தது. திருடிய நகையை நிரஞ்சனா, ஆண் நண்பர் நெய்க்காரப்பட்டி பிரபாகரன் 34, மூலம் உருக்கி விற்றனர். பழநி டவுன் போலீசார் விசாரணையில் திருடப்பட்ட நகைகள் மீட்க பட்டது. நிரஞ்சனா, பிரபாகரன் இருவரையும் பழநி டவுன் போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் எஸ்.பி., ஜெயக்குமார் தெரிவிக்கையில்," இடும்பன் கோயில் நகைத் திருட்டு வழக்கில் நிரஞ்சனா, பிரபாகரன், இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் விசாரணை நடந்து வருகிறது."என்றார்.