ராமேஸ்வரத்தில் 1000 பொம்மைகளுடன் நவராத்திரி கொலு: பக்தர்கள் ஆர்வம்
ராமேஸ்வரத்தில் ஓய்வு ஆசிரியர் வீட்டில் திருப்பதி கருட சேவை விழா, மைசூரு தசரா விழா உள்ளிட்ட சில ஆன்மிக வரலாற்றை நினைவு கூறும் விதமாக 1000 பொம்மைகளுடன் நவராத்திரி கொலு அமைத்து அசத்தியுள்ளார். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
ராமேஸ்வரம் ஜல்லிமலையை சேர்ந்த வக்கீல் விஜயகுமார், இவரது மனைவி ஜெயசித்ரா 50, இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் வீட்டில் தோட்டம் வளர்ப்பதிலும், கலைநயமிக்க பொம்மைகள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டுவார். இந்நிலையில் நவராத்திரி விழாவை யொட்டி தனது வீட்டில் ராமாயணம், மகாபாரதம் வரலாறு, தசாவதாரம், ஆண்டாள் பிறப்பு வரலாறு, சப்த கன்னிகள், அஷ்டலட்சுமிகள் மற்றும் திருப்பதி தங்க கருட சேவை விழா, மைசூரு தசரா விழா உள்ளிட்ட ஆன்மிக வரலாற்றை நினைவு கூறும் விதமாக 1000 பொம்மைகளுடன் கொலு அமைத்துள்ளார்.
ஆன்மிக வரலாற்றை தத்ரூபமாக பொம்மையில் வடிவமைத்து உள்ளதால், தினமும் ஏராளமான பக்தர்கள் கண்டு ரசிக்கின்றனர். இதுகுறித்து ஜெயசித்ரா கூறியதாவது :
முதன் முதலாக என் வீட்டில் ஆன்மிகம் சார்ந்த வரலாற்றை மக்களுக்கு நினைவு கூறும் விதமாக கடந்த 6 ஆண்டில் ஆயிரத்திற்கும் மேலான பொம்மைகள் வாங்கி வடிவமைத்தேன். இந்த கொலு அமைக்க 5 நாட்கள் ஆனது. இதனை மக்கள் பயபக்தியுடன் கண்டு ரசித்து தரிசிக்கின்றனர் என்றார்.