உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி கடைசி சனி; பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி கடைசி சனி; பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

விக்கிரவாண்டி

வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விக்கிரவாண்டி, பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி, ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. உற்சவர் கோவில் வளாகத்தினுள் வலம் வந்து ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விருதுநகர்:

புரட்டாசி மாதத்தின் இறுதி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். விருதுநகரில் புரட்டாசி மாதத்தின் 5வது சனிக்கிழமையை முன்னிட்டு வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலின் பாலாஜி சன்னதி, ராமர் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். சுவாமிக்கு துளசி மாலை சாற்றி வழிபாடு செய்தனர். மேலும் ரெங்கநாத சுவாமி கோயிலில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் தினமும் சுவாமி, அம்பாள் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.

திருவாடானை


தொண்டி உந்திபூத்த பெருமாள், பாண்டுகுடி லட்சுமி நாராயண பெருமாள், குளத்துார் குலசேகர பெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தேனி

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

அல்லிநகரம் 


வரதராஜ பெருமாள் கோயில், கணேச கந்தா பெருமாள் கோயில், பழனிசெட்டிபட்டி பெருமாள் கோயில், பூதிப்புரம் வரதராஜ பெருமாள் கோயில், பெரியகுளம் ரோடு எம்பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், நடைபெற்றன. இவ்வாண்டின் இறுதி புரட்டாசி சனிக்கிழமை என்பதால், ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோயில்களுக்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்து துளசி மாலை, பூக்கள் வழங்கி சாமி தரிசனம் செய்தனர்.


பெரியகுளம்

வரதராஜப் பெருமாள் கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு பெருமாளுக்கு சுப்ரபாதம் சேவை துவங்கியது. பால், தேன், இளநீர், சந்தனம், பன்னீர், ஜவ்வாது உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. திருப்பாவை சேவித்தல், மகா தீபாராதனை நடந்தது. மூலவர் வரதராஜப்பெருமாள் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்திலும், மகாலட்சுமி அம்மன் திருச்சானூர் அலமேலு மங்கை அலங்காரத்திலும்,உற்ஸவர் கருட சேவை வாகனத்திலும் காட்சியளித்தார். பக்தர்கள் பிரசாதம் வழங்கப்பட்டது. நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர்,ராதை மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. தாமரைக்குளம் மலை மேல் வெங்கடாசலபதி கோயில் சிறப்பு பூஜை நடந்தது. லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்காரத்தில் சுவாமி

திருத்தணி


திருத்தணி பகுதியில் கடைசி புரட்டாசி சனிக்கிழமை ஒட்டி, நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. புரட்டாசி மாதம், 5ம் சனிக்கிழமையை ஒட்டி, நேற்று திருத்தணி, விஜயராகவ பெருமாள் கோவிலில் காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் மூலவரை தரிசித்தனர்.

பொன்பாடி கொல்லகுப்பம் கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், நேற்று காலை, 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.

நெமிலி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி வைகுண்ட பெருமாள் கோவிலில், நேற்று, காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கிராம வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ராமகிருஷ்ணாபுரம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், திருத்தணி பெரிய தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவில் உட்பட திருத்தணி தாலு காவில் உள்ள பெருமாள் மற்றும் பஜனை கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

ஊத்துக்கோட்டை சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று ஐந்தாவது புரட்டாசி சனிக்கிழமை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட சுவாமி படம் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அவிநாசி

அவிநாசி, ராயம்பாளையம் செல்லும் வழியில், சங்கமாங்குளக்கரை அருகே உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், 9-ம் ஆண்டு புரட்டாசி விழா நேற்று நடந்தது.

இதையொட்டி, காலையில் கணபதி ஹோமம், கலச ஸ்தாபனம், கங்கணம் கட்டுதல், ஸ்ரீ ஹரிவாயு துதி பாராயணம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, திருக்கல்யாண வைபவம், குத்துவிளக்கு பூஜை நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீனிவாசப்பெருமாள்.

திருப்பூர்

திருப்பூர் காங்கயம் ரோடு, விஜயாபுரம் ஒத்தக்கடையில் உள்ள ஸ்ரீகருட ஈஸ்வர பெருமாள் கோவிலில், கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது. புரட்டாசி சனிக்கிழமைகளில் இக்கோவிலில் அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வந்தது. ஐந்தாவது புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, காலை 6:00 மணிக்கு திருமஞ்சனமும், 7:00 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கொங்குநாடு விவசாயிகள் கட்சித் தலைவர் முருகேசன், பொதுச்செயலாளர் ராஜாமணி, பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் அன்னதானத்தைத் தொடங்கி வைத்தனர். புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்பதால், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பெருமாளைத் தரிசித்து, அன்னதானத்தில் பங்கேற்றனர்.

ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், அதிகாலை 5.30 மணிக்கு பாண்டியன் கொண்டை கிரீட அலங்காரத்தில், கருட வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீவீரராகவர், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் துளசி மாலை சாற்றி வழிபட்டனர். பிரதோஷ வழிபாட்டுக் குழு சார்பில், கடந்த ஐந்து சனிக்கிழமைகளிலும் காலை, மாலை வேளைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் வாசலில் பெருமாள் தாசர்கள் சங்கு, சேகண்டி ஒலியுடன் பூஜை செய்தனர். பக்தர்கள் அரிசி, பருப்பு, காய்கறிகளைத் தலைவாழை இலையில் சமர்ப்பித்தனர். தாசர்கள் சங்குநாதம் எழுப்பி ஆசி வழங்கினர்.

தாளக்கரை ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமாள் கோவில், மொண்டிபாளையம் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோவில், கருவலூர் கருணாகர வெங்கட்ரமணப் பெருமாள் கோவில், அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி கரிவரதராஜப் பெருமாள் கோவில்கள், அவிநாசி காரணப் பெருமாள் கோவில், கோவில்வழி பெரும்பண்ணை வரதராஜப் பெருமாள் கோவில், சாமளாபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நேற்று வழிபாடு நிறைவடைந்ததையொட்டி, பக்தர்கள் பெருமாளைத் தரிசித்து வழிபட்டுச் சென்றனர்.

திண்டுக்கல்

புரட்டாசி கடைசி சனிக்கிழமை யை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் துவங்கியதில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் உற்சவருக்கு விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. நேற்று ஆதிசேஷன் மீது சயன திருக்கோலத்தில் பள்ளிகொண்ட பெருமாள் எழுந்தருளினார். விடுமுறை, நவராத்திரி விழா காரணமாக குடும்பங்களாய் குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஒட்டன்சத்திரம்


காளாஞ்சிபட்டி ரங்கநாத சுவாமி கோயிலில் அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. புதிய ரதத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ரங்கநாதர் பஜனை பாடல்கள் பாடப்பட்டு திருக்கம்பத்தில் தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. நேற்று முன்தினம் உற்சவர் ரங்கநாதர் மலையை சுற்றி ஊர்வலமாக வந்தார். பருமரத்துப்பட்டி வெங்கடேச பெருமாள், பத்மாவதி, மகாலட்சுமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

பழநி

பழநி மேற்கு ரதவீதி லட்சுமி நாராயண பெருமாள், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள், ராமநாதநகர் காரியசித்தி லட்சுமி நரசிம்மர், கண்ணாடி பெருமாள், ரங்கசாமி மலை பாதம், பாலாறு அணை ஆஞ்சநேயர், பாலசமுத்திரம் வீரஆஞ்சநேயர், கரடிகூட்டம் சாந்தஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

சின்னாளபட்டி


சிறுமலை அடிவாரம் திருவேங்கடமுடையான் கோயிலில் மூலவருக்கு துளசி, மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.

சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர், மேலக்கோட்டை ஆஞ்சநேயர், செம்பட்டி கோதண்டராமர், கன்னிவாடி கதிர்நரசிங்க பெருமாள், கொத்தமல்லி கதிர்நரசிங்க பெருமாள், ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி, தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள், வடமதுரை சவுந்தரராஜ பெருமாள், மங்களப்புள்ளி லட்சுமி நரசிம்ம பெருமாள், திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.,பட்டி தாதகோனார் சந்து பெருமாள் உட்பட மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.


திருவொற்றியூர்

காலடிப்பேட்டை கல்யாயண வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத உற்சவர் பவளவண்ண பெருமாளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான முத்துமணிகளால் தொடுக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது. இந்த விசேஷ தரிசனத்தை காண, அதிகாலை முதலே பக்தர்கள் கூடி, சுவாமியை வழிபட்டனர்.

திருப்போரூர்

திருப்போரூர் அடுத்த ஸ்ரீதேவி – பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது.

நெல்லிக்குப்பம் அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அதிகாலை, 5:30 மணிக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தன.

அகரம் கிராமத்தில் பாமா – ருக்குமணி சமேத கோபாலகிருஷ்ண பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.

சிறுதாவூர், மானாமதி, திருப்போரூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

தேவகோட்டை


தேவகோட்டை கோதண்டராமர் சுவாமி கோயில், ரங்கநாத பெருமாள் கோயில்களில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையான நேற்று ராமர், பெருமாள் சுவாமி அம்பாள்களுக்கு மூலவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தன. உற்சவர்களுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தன. ஜெயவீர ஆஞ்சநேயர், வெற்றி தரும் ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. கடைசி நாள் என்பதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கைலாசநாதர் கோயிலில் உள்ள சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் தீபாராதனை நடந்தது.

சிங்கம்புணரி

சிங்கம்புணரியில் ராமர் பட்டாபிஷேகம் நடந்தது.

அருவியூர் தெற்குவளவு நகரத்தாருக்கு பாத்தியப்பட்ட லட்சுமண், அனுமன், சீதா சமேத ராமர் கோயிலில் ராமர் பட்டாபிஷேகம் நடந்தது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு பஜனை பாடப்பட்டது. 11:00 மணிக்கு சீதா ராமர் திருக்கல்யாணம் நடந்தது. கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 8:00 மணிக்கு ராமர் பட்டாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் லட்சுமணன், அனுமன், சீதா சமேத ராமர் காட்சியளித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அருவியூர் தெற்கு வளவு நகரத்தார் செய்திருந்தனர்.

மேட்டுப்பாளையம்

காரமடை அரங்கநாதர் கோவிலில், நேற்று புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமை விழா விமரிசையாக நடந்தது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் முடிந்த பின், அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவ மூர்த்தி அரங்கநாத பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் வலம் வந்து, கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு திருவாராதனும், மந்திர புஷ்பம், அஷ்டோத்திரம் ஆகியவை செய்யப்பட்டது. அதன் பின் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கடைசி சனி என்பதால், அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, அரங்கநாத பெருமாளை வழிபட்டனர். கோவில் வெளியே அமர்ந்திருந்த தாசர்களிடம் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த அரிசி, பருப்பு, காய்கறிகளை படையளிட்டனர். பின்பு தாசர்களிடம் இருந்து சிறிதளவு காய்கறி பெற்று சென்றனர். வருகிற, 21ம் தேதி குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, அம்பு போடும் விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துசாமி மற்றும் பணியாளர்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !