12ம் நுாற்றாண்டு பெருமாள் கோவில் ஆவுடையார்கோவில் அருகே கண்டெடுப்பு
புதுக்கோட்டை: ஆவுடையார்கோவில் அருகே, 12-ம் நுாற்றாண்டு பெருமாள் கோவிலை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், குமுளுரில் வரலாற்று ஆய்வாளரும், பேராசிரியர் காளிதாஸ் மற்றும் அவரது ஆய்வுக்குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில், 12ம் நுாற்றாண்டில் உள்ள பெருமாள்கோவில், இவ்வூர் பால் முனீஸ்வரர் கோவிலுக்கு அருகில் தரையில் புதையுண்ட நிலையில் இருந்ததை கண்டறிந்தனர்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி போன்ற திருமேனிகள் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றன. பட்டு பீதாம்பரம் உடுத்தி, காதணி, கழுத்தணி, முப்புரி நுாலணிந்து, சங்கு, சக்கரம் ஏந்தி பொன்னும் மணியும் பதித்த நீள்கிரிடம் அணிந்து அபய வரத முத்திரைகளுடன் காட்சி தருகிறார். பெருமாள் திருமேனியின் கைகள், கிரீடம் ஆகியன உடைபட்ட நிலையில் உள்ளன. பிராட்டியார் இருவரில் பூதேவி நின்ற கோலத்தில் காட்சி தந்து, கையில் பாரிஜாதமலர் கொண்டும், ஸ்ரீதேவி திருமேனி பூமியில் புதையுண்ட நிலையிலும் உள்ளன. கண்டறியபட்ட தெய்வத்திருமேனிகளை நோக்கும்போது இவை, இராஜேந்திர சோழனுக்கு பின் அரியணை ஏறிய சடையவர்மன் சுந்தரபாண்டியன் கட்டிய கோவிலாக இருக்கலாம். சமய காழ்ப்புகளாலும் அரசியல் மாற்றங்களினாலும் இக்கோவில் அழிந்து பட்டிருக்கலாம். இதுபோன்ற தொல்லியல் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.