உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் மந்த கதியில் நடக்கும் மண்டல பூஜை கால ஏற்பாடுகள்: தேவஸ்வம் போர்டு அமைச்சர் அதிருப்தி

சபரிமலையில் மந்த கதியில் நடக்கும் மண்டல பூஜை கால ஏற்பாடுகள்: தேவஸ்வம் போர்டு அமைச்சர் அதிருப்தி

திருவனந்தபுரம்: ‘‘சபரிமலையில் மண்டல பூஜை காலம் அடுத்த மாதம் தொடங்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு இதுவரை முடிக்கவில்லை. அரவணை தயாரிப்பு முதல் கோவில் பராமரிப்பு பணிகள் வரை, அனைத்தும் மந்த கதியில் நடக்கின்றன,’’ என, கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் முரளிதரன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.


கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும், மண்டல – மகர விளக்கு காலங்களில், நாடு முழுதும் இருந்து திரளான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த ஆண்டு மண்டல பூஜை நவ., 17ல் தொடங்குகிறது.


இந்நிலையில், மாத பூஜைக்காக நேற்று  சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், மண்டல காலத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய, காங்கிரசைச் சேர்ந்த கேரள முதல்வர் சதீசன் அங்கு சென்றார். பக்தர்கள் வாகனங்களை நிறுத்தும் நிலக்கல்லில் இருந்து பம்பை வழியாக சென்று, சன்னிதானம் வரை அவர் ஆய்வு மேற்கொண்டார்.


முதல்வர் சதீசன் கூறுகையில், ‘‘மண்டல பூஜை காலத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார். பிரசாத வினியோகம் தேவஸ்வம் போர்டின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அரவணை, அப்பம் பிரசாதத்திற்கு தட்டுப்பாடு ஏற்படாது என, தேவஸ்வம் போர்டு தலைவர் உறுதி அளித்துள்ளார்,’’ என்றார். முதல்வர் சதீசன் இவ்வாறு தெரிவித்த நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த தேவஸ்வம் போர்டு அமைச்சர் முரளிதரன், மண்டல கால பூஜை ஏற்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக கூறியுள்ளார்.


அவர் கூறியதாவது:


சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் கிடைப்பதில் எந்த தட்டுப்பாடும் இருக்கக்கூடாது. ஆனால், அதற்கான பணிகளை தேவஸ்வம் போர்டு முழுதாக முடிக்கவில்லை. மண்டல பூஜை காலம் தொடங்கவுள்ள நிலையில், அரவணை பிரசாத தயாரிப்புக்கான அரிசி கொள்முதல் ஒப்பந்தத்தை தேவஸ்வம் போர்டு இதுவரை இறுதி செய்யாமல் இருக்கிறது.


அரவணை பிரசாதம் தயாரிக்கும் ஆலையை நவ., 5க்குள் பழுதுபார்த்து சீரமைக்க வேண்டும். கோவிலில் பராமரிப்பு பணிகளும் மந்த கதியில் நடக்கின்றன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தேவஸ்வம் போர்டுக்கும், போலீசாருக்கும் இடையே தெளிவான ஒருங்கிணைப்பு இல்லை. மண்டல பூஜை காலம் தொடங்குவதற்குள், இந்த குறைபாடுகளை எல்லாம் சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


இதற்கிடையே, தேவஸ்வம் போர்டு தலைவர் ஜெயக்குமார் கூறியதாவது:


அரவணை பிரசாதம் வாங்க, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, சன்னிதானத்தின் பல்வேறு பகுதிகளில் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் பணத்தை செலுத்தி பக்தர்கள் அரவணை பிரசாத டின்னை பெற்றுக் கொள்ளலாம்.


தற்போது சன்னிதானத்தில், 3.2 லட்சம் அரவணை டின்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தவிர, நாளொன்றுக்கு, 1.5 லட்சம் அரவணை டின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அக்., 25க்கு பின், அரவணை தயாரிக்கும் இரண்டாவது ஆலையும் செயல்பாட்டுக்கு வந்துவிடும். அதன்பின், நாளொன்றுக்கு, 3.5 லட்சம் அரவணை டின்களை தயாரிக்க முடியும். இதனால், மண்டல பூஜை காலங்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிப்பதில் எந்த தட்டுப்பாடும் ஏற்படாது. சன்னதி மற்றும் கோவில் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள், 70 சதவீதம் வரை நிறைவடைந்து விட்டன. எஞ்சிய பணிகளும் விரைவில் முடிந்துவிடும். கட்டுக்கடங்காத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்போது, நெரிசலை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுவது இயல்பு தான். எனினும், இந்த பிரச்னை உடனடியாக சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !