உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தியில் 30 லட்சம் தீபங்கள் ஏற்றத் திட்டம்: தீபோத்ஸவத்துக்கு பிரம்மாண்ட ஏற்பாடு!

அயோத்தியில் 30 லட்சம் தீபங்கள் ஏற்றத் திட்டம்: தீபோத்ஸவத்துக்கு பிரம்மாண்ட ஏற்பாடு!

அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறவுள்ள 10-வது தீபோத்ஸவ விழாவை முன்னிட்டு, சரயு நதிக்கரையில் உள்ள 56 படித்துறைகளில் 30 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி ஒளிரச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.


அயோத்தி ராமர் கோவிலில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தீபோத்ஸவம், லேசர் லைட் கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவுக்காகப் படித்துறைகளைச் சுத்தம் செய்து, விளக்குகள் வைப்பதற்கான இடங்களைக் குறிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. வெள்ளிக்கிழமை காலை வேத மந்திரங்கள் முழங்க பூமி பூஜை நடத்தப்பட்டு, விழாவுக்கான பணிகள் முறைப்படி தொடங்கப்பட உள்ளன. 30 லட்சம் விளக்குகளை ஏற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து மற்றும் விளக்குகளை அடுக்கும்போது ஏற்படக்கூடிய சேதங்களைக் கருத்தில் கொண்டு, 33 லட்சம் அகல் விளக்குகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.


56 படித்துறை: கடந்த ஆண்டுகளில் 55 படித்துறைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விரிவாக்கப்பட்ட ராம் கி பைடி, சௌதரி சரண் சிங் படித்துறை, பஜன் சந்தியா தலம் உள்ளிட்ட 56 படித்துறைகளில் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன. படித்துறைகள் முழுவதும் விளக்குகளைச் சீரான இடைவெளியில் அமைப்பதற்காகப் பிரிவுகளாகப் பிரித்து திட்டமிடப்பட்டுள்ளது. இடங்களைக் குறிக்கும் பணிகள் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


35 ஆயிரம் தன்னார்வலர்கள்: விளக்குகளை அடுக்கி ஏற்றும் பணியில் 30 கல்லூரிகள், 40 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு படித்துறைக்கும் தனித்தனியாகப் பொறுப்புகள் ஒதுக்கப்படும். தன்னார்வலர்கள் அனைவரும் இணையவழியில் பதிவு செய்யப்பட்டு, புகைப்படம், தொடர்பு விவரங்கள், பணியமர்த்தப்படும் இடம் மற்றும் கியூஆர் குறியீடு கொண்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் அடையாளச் சரிபார்ப்பையும் பணிகளின் ஒருங்கிணைப்பையும் எளிதாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தீபோத்ஸவ விழாவுக்கான விளக்குகள், படித்துறை மேலாண்மை, தன்னார்வலர்கள் நியமனம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ராம்மனோகர் லோகியா அவத் பல்கலைக்கழகமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.  சரயு நதிக்கரையில் 30 லட்சம் தீபங்கள் ஒரே நேரத்தில் ஒளிரவுள்ளதால், அயோத்தி நகரமே தீப ஒளியில் ஜொலிக்கத் தயாராகி வருகிறது



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !