கண்டரமாணிக்கம் கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேக யாக பூஜை
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் கைலாசநாதர் உடனாய ஏலவார்குழலி அம்பாள் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.
சிவகங்கை சமஸ்தானததைச் சேர்ந்த இக்கோயிலுக்கு 2005 ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது மீண்டும் கோயிலுக்கு புதிய ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதி உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நவ.,12 ல் சுவாமிநாத குருக்கள் தலைமையில் சிவாச்சார்யர்கள் யாகசாலை பூஜைகளை துவக்கி, அன்று மாலையில் முதலாம் கால யாக பூஜைகள் நிறைவடைந்தன. நேற்று காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளும், ,மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகளும் துவங்கின. தொடர்ந்து பூர்ணாகுதி தீபராதனை நடந்தது. சுற்று வட்டாரக் கிராமத்தினர் யாகசாலையில் தரிசனம் செய்தனர். இன்று காலை 8:45 மணிக்கும் நான்காம் கால யாக பூஜைகளும், ,மாலை 6:00 மணிக்கு ஐந்தாம் காலயாக பூஜைகளும் துவங்குகின்றன. நாளை காலை 6:00 மணிக்கு ஆறாம் காலயாக பூஜை துவங்குகிறது. பின்னர் பூர்ணாகுதி நடந்து காலை 7:15 மணிக்கு யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்படுகின்றனர். தொடர்ந்து காலை 7:45 மணி முதல் காலை 8:20 மணிக்குள் கோபுர,விமானங்களுக்கு சிவாச்சார்யர்களால் புனிதநீரால் கும்பாபிஷேகம் நடைபெறும். பின்னர் காலை 8:20 மணி முதல் பட்டு சார்த்துதல்,மகா அபிஷேகமும், இரவு 7:00 மணி முதல் மகா தீபாராதனை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.