திருநாகேஸ்வரத்தில் ரூ.1.42 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி
கும்பகோணம்: திருநாகேஸ்வரத்தில் 1.42 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் நாகநாதசுவாமி கோவில் பக்தர்கள் தங்கும்விடுதி பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தபடி நாகநாதசுவாமிகோவிலில் பக்தர்கள் தங்கும்விடுதி 1.42 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. கும்பகோணம் அடுத்துள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் நாகநாதசுவாமிகோவில் உள்ளது. இங்கு ராகுகாலத்தில் ராகுபகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி வந்து செல்கின்றனர். திருநாகேஸ்வரம் காரைக்கால் மெயின்ரோட்டின் அருகாமையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில் நாகநாதசுவாமி கோவில் பக்தர்கள் தங்கும் விடுதி 1.42 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்றுமுன்தினம் காலை நடந்தது. பூமிபூஜை நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., தவமணி, உதவி ஆணையர் பரணீதரன் முன்னிலை வகித்தனர். ராகுதலம் அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகளை செய்தார். இந்நிகழ்ச்சியில் டவுன் பஞ்., தலைவர் சாமிநாதன், துணைத்தலைவர் சிங்காரவேலு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வைரவேல், ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூமிபூஜைக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் பரணீதரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.