உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தெப்போற்ஸவம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தெப்போற்ஸவம்

திருச்சி: தமிழகத்தில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்திப்பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை தேர் திருவிழா வெகு பிரசித்திப்பெற்றது. கடந்த, 6ம் தேதி, மேஷ லக்னத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், மரக்குதிரை வாகனம், வெள்ளிக்குதிரை வாகனத்திலும் அம்மன் புறப்பாடாகி மூலஸ்தானம் சென்றடைந்தார். நாள்தோறும் காலை, 10 மணிக்கு, அம்மன் பல்லக்கில் புறப்பட்டு, ஆஸ்தான மண்டபம் சென்றடைந்து, அபிஷேகம் கண்டருளினார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த, 16ம் தேதி, மிதுன லக்னத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது.

*தெப்பம்: நேற்று முன்தினம், வெள்ளி காமதேனு வாகனம், நேற்று புஷ்ப பல்லாக்கு, 23ம் தேதி தங்க கமல வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்து, மூலஸ்தானம் அடைகிறார். 13ம் நாளான, இன்று (19ம் தேதி) இரவு, தெப்போற்ஸவம் நடக்கிறது. மதியம், 12 மணிக்கு, அம்மன் பல்லக்கில் எழுந்தருளி, ஆஸ்தான தெப்ப உற்சவ மண்டபத்தை சென்றடைகிறார். மாலை, 5 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு, 8 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளி, ஐந்து முறை வலம் வருகிறார். பின்னர் வழிநடை உபயங்கள் கண்டருளி, வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு, 11 மணிக்கு மூலஸ்தானம் அடைகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !