ஏர்வாடி தர்கா புனித குளத்தில் குப்பை பக்தர்கள் அவதி!
கீழக்கரை: ஏர்வாடி தர்கா அருகே உள்ள குளத்தில் கழிவு நீர் மற்றும் குப்பை கலந்து துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவையொட்டி இரண்டு ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்த குளத்தில் நீராடி விட்டு தர்கா சென்று பக்தர்கள் வேண்டுதல் செய்தனர். தற்போது குப்பை மற்றும் கழிவு நீர் கலந்து குளம் மாசுபட்டுள்ளது. இரவு நேரங்களில் திறந்த வெளி கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். ஒன்றிய கவுன்சிலர் சவுந்தரபாண்டியன் கூறியதாவது;குளத்தை சுத்தப்படுத்த கலெக்டர் நந்தகுமார் ஏற்கனவே உத்தரவிட்ட நிலையிலும் முழுமையான பணி நடக்கவில்லை. கொசுக்கள் உற்பத்தியாகும் கேந்திரமாக காட்சியளிக்கிறது. துர் நாற்றத்தால் பஸ்ஸ்டாண்ட், மீன் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு செல்ல முடியவில்லை.குளத்தை உடனடியாக தூர்வார வேண்டும்,என்றார்.