ஐயப்பன் கோயில் திருப்பணிகள் ஜரூர்
உத்தமபாளையம்: ராயப்பன்பட்டி சண்முகாநதி அணை அருகே, ஐயப்பன் கோயில் கட்டும் பணி ஜரூராக நடந்து வருகிறது. உத்தமபாளையம் அருகே, ராயப்பன்பட்டியில் சண்முகாநதி அணை உள்ளது. அணை அருகில், மலையடிவாரத்தில் 2008 ல் ஐயப்பன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.பின்னர் 2009 ல் பொதுமக்கள் நன்கொடையுடன் சந்நிதியாக கட்டப்பட்டு வழிபாடுகள் நடந்து வந்தது. கடந்த ஆண்டு ஜனவரியில், முல்லைப் பெரியாறு பிரச்னை ஏற்பட்டபோது, தமிழகத்தில் இருந்து கேரளாவில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு, செல்ல முடியாத பக்தர்கள் இங்கு இருமுடி இறக்கி வழிபட்டனர். ஐயப்பனுக்கு நெய் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்து, விரதம் முடித்து மாலையை கழற்றினர். பெரியாறு அணை பிரச்னை குறித்து, அறியாமல் வந்த பக்தர்களும், சண்முகாநதி ஐயப்பன் கோயில் பற்றி கேள்விப்பட்டு, அங்கு சென்றனர். இதனால் இக்கோயில் பிரபலமானது. தற்போது, இக்கோயிலை மேம்படுத்தி விரிவாக்கும் பணிகள் பொதுமக்கள் நன்கொடையுடன் நடந்து வருகிறது. கோயிலில், 18 படிகள், சுற்றுச் சுவர், முன் மண்டபம் அமைக்கும் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று கும்பாபிஷேகம் நடத்த உள்ளதாக, இக்கோயில் பூசாரி முருகன் தெரிவித்தார்.