மழை வேண்டி நூதன வழிபாடு
திருப்பூர்: மங்கலம் பெரியபுத்தூரில், வறட்சி நிலை மாறி, மழை பொழிய வேண்டும், என, அப்பகுதி பெண்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர். கடும் வறட்சியால் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கடவுளுக்கு உணர்த்தும் வகையில், பெண்கள் ஒன்று கூடி, சிறுமிக்கு மாலை அணிவித்து மண் கலயத்தை கையில் கொடுத்தனர்; பெண்களும் மண் கலயம் ஏந்தி, வீடு, வீடாக சென்று, பழைய சோறு மற்றும் சின்ன வெங்காயம் பெற்றனர்.பின், அவற்றை விநாயகர் கோவிலுக்கு எடுத்துச்சென்று, ஒன்றாக கலந்து, அனைவரும் பழைய சோறு சாப்பிட்டனர். வருண பகவான், கருணை காட்டாததால், ஊரை காலி செய்வதாக கூறி, கூடை, முறம் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள, நொய்யல் ஆற்றுக்கு சென்றனர்.பெரியவர்கள் சிலர், "மழை பொழியும், விநாயகரை வணங்குவோம், என கூறி, பெண்களை திரும்ப அழைத்து வந்தனர். ஊருக்குள் வந்த பொதுமக்கள், விநாயகர் கோவில் கருவறை, நிலவு பகுதியில் மண் மூட்டைகளை அடுக்கி, 108 குடம் தண்ணீர் ஊற்றினர். பொங்கல் வைத்து, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். பழங்காலத்தில் மழை வேண்டி, முன்னோர் இவ்வாறு வழிபட்டதால், அதே நூதன முறையை பின்பற்றி வழிபட்டதாக, பெண்கள் தெரிவித்தனர்.