அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
திருத்தணி: இரண்டு அம்மன் கோவில்களில் நடந்த மகா கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். திருத்தணி அடுத்த, முருக்கம்பட்டு கிராமத்தில், மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், 75 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடத்தப்பட்டு, கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில், ஐந்து யாக சாலைகள், 500 கலசங்கள் அமைத்து, கடந்த, 8ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜை, வாஸ்து சாந்தி உட்பட பல்வேறு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு, மூன்றாம் கால யாகசாலை பூஜை, காலை, 9:30 மணிக்கு கலச ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, 10:15 மணிக்கு, கோவில் விமானத்தின் மீது கலச நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல், திருத்தணி ஆசிரியர் நகரில் அமைந்துள்ள மூகாம்பிகா அம்மன் கோவிலில், நேற்று காலை, 9:00 மணி முதல், காலை, 10:30 மணி வரை கும்பாபிஷேகம் விழா நடந்தது. விழாவை ஒட்டி, கோவில் வளாகத்தில் மூன்று யாக சாலைகள், 208 கலசங்கள் அமைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. காலை, 10:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, விமானத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.