கிராமக்கோவில்களில் திருவிழா பரவசத்தில் பக்தர்கள்!
ADDED :4571 days ago
உடுமலை : உடுமலை அருகே கிராமக்கோவில்களில் நடந்த திருவிழாக்களில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பூளவாடி புதுநகர் கருப்பணசாமி கோவில் திருவிழாவையொட்டி, அமராவதி அணையிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, கருப்பணசாமி, கன்னியாத்தாள், ஏழுரூம்மன் மற்றும் வன தெய்வங்களுக்கு நீராட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து கருப்பணசாமி, கன்னிமார் உருவாரம் அழைத்து வந்து நிலை நாட்டுதல், கிடாவெட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மஞ்சள் நீராடுதல் மற்றும் கரகாட்ட நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெற்றது. கல்லாபுரம் மாவளம்பாறை மாவளப்பன் கோவில் திருவிழாவில், தீர்த்தம் செலுத்துதல், திருவீதியுலா, உருவாரம் எடுத்து வருதல் ஆகியவை நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.