அறநிலையத்துறையினர் ஏற்பாடு அழகிரிநாதர் கோவிலில் 100 பேருக்கு அன்னதானம்
சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில், சனிக்கிழமை தோறும், 100 பேருக்கு அன்னதானம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் அன்னதானத்திட்டத்தின் கீழ், சேலம் மாநகர பகுதியில், கோட்டை மாரியம்மன் கோவிலில், தினமும், 100 பேருக்கும், சுகவனேஸ்வரர் கோவிலில், 75 பேருக்கும், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், 50 பேருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பிற கோவில்களில், வருமானத்துக்கு ஏற்ப, அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை தினத்தில், அழகிரி நாதர் கோவிலுக்கு, அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். மேலும், நன்கொடையாளர்கள் அதிகளவில், பக்தர்களுக்கு அன்னதானம் செய்யவும் விரும்புகின்றனர். அதனால், இங்கு சனிக்கிழமைகளில், 100 பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.