விநாயகர் சதுர்த்தி: கட்டுப்பாடு விதிப்பு
திருப்பூர்: விநாயகர் சிலை பாதுகாப்பில் கட்டாயம் ஐந்து பேர் இடம் பெற்றிருக்க வேண்டும்; ஓலை கூரைக்குள் சிலை அமைக்கக் கூடாது; தகர ஷெட் மட்டுமே அமைக்க வேண்டும், என, போலீசார் அறிவுறுத்தினர்.விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் நேற்று நடந்தது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இந்து மக்கள் கட்சி, பாரத்சேனா, பாரத அன்னையர் பேரவை, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில், "கடந்தாண்டு வைக்கப்பட்ட இடத்தில் மட்டுமே சிலை வைக்க வேண்டும்; ஓலை கூரைக்குள் சிலை இருக்கக்கூடாது; தகர ஷெட் மட்டுமே அமைக்க வேண்டும்; ஐந்து பேர் கட்டாயம் சிலை பாதுகாப்புக்கு இருக்க வேண்டும்; பொறுப்பாளர் மது அருந்தியிருக்கக் கூடாது.பெட்டி வடிவ ஒலிபெருக்கி மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள் சிலைகளை எடுத்துச் சென்று விட வேண்டும். மசூதி அருகே சிலை அமைக்கக் கூடாது; ஊர்வல பாதை மசூதியுள்ள பாதையாக இருந்தால், மாற்றம் செய்யப்படும். தீயணைப்பு சாதனத்தை சிலை அருகில் வைக்க வேண்டும்.போலீசார் ஒதுக்கும் பாதையை தவிர, மாற்றுப்பாதையில் சிலை எடுத்துச் செல்லக் கூடாது. ஊர்வலத்தில் ஆயுதங்களை எடுத்து வர அனுமதியில்லை. அனுமதிக்கப்பட்ட உயரம் மட்டுமே சிலை இருக்க வேண்டும். மாற்று மதத்தினரை புண்படுத்தும் வகையில் யாரும் பேசக்கூடாது, என போலீசார் தெரிவித்தனர்.