சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிள்ளையார்பட்டியில் தேரோட்டம்!
ADDED :4420 days ago
பிள்ளையார்பட்டி: சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு, பிள்ளையார்பட்டியில் தேரோட்டம் நடக்கிறது. ஆக., 31ல், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும், காலை சுவாமி புறப்பாடு, இரவில் திருவீதி உலா நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை, யானை வாகனத்தில் கற்பகவிநாயகர், கஜமுக அசுரனை வதம் செய்தார். நாளை, ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு, காலையில் விநாயகர் தேரில் எழுந்தருளுகிறார்; மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் துவங்கும். தொடர்ந்து, சண்டிகேஸ்வரர் எழுந்தரும் தேரை, பெண்கள், குழந்தைகள் மட்டும் வடம் பிடிப்பர். வழக்கமாக, தங்கக் கவசத்தில் அருள்பாலிக்கும் மூலவர், நாளை மாலை, 4:30 முதல், இரவு, 10:00 மணி வரை, சந்தனக்காப்பில் தரிசனம் தருவார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இந்த அலங்காரம் செய்யப்படும்.