வேணுகோபால கிருஷ்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
சித்தாமூர்:பெரிய களக்காடி வேணுகோபால கிருஷ்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய களக்காடி கிராமத்தில் புகழ் பெற்ற ருக்மணி ஸத்யபாமா உடனுறை வேணுகோபால கிருஷ்ணசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி, 13ம் தேதி மாலை, 5:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை, ஆசார்ய ரித்விக் வர்ணம், வாஸ்து சாந்தி, யாகசாலா நிர்மாணம், அங்குரார்ப்பணம், அக்னி பிரதிஷ்டை, ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து, 14ம் தேதி மாலை, 4:00 மணிக்கு அதிவாஸத்ரயம், நவகலச, மகா சாந்தி ஹோமம், திருமஞ்சனம், பூர்ணாஹீதியும், இரவு, 9:00 மணிக்கு ததுக்த ஹோமம், கும்பாராதனமும் நடந்தன. நேற்றுமுன்தினம் காலை, 5:00 மணிக்கு விஸ்வரூபதரிசனம், புண்யாஹவாசனமும், 7:00 மணிக்கு மகா பூர்ணாஹீதியும், 8:30 மணிக்கு கும்ப புறப்பாடும், 8:45 மணிக்கு விமானத்தில் மஹா ஸம்ப்ரோஷணம், குடமுழுக்கு நன்னீராட்டுவிழா நடந்தது. காலை, 9:00 மணிக்கு மூலவர் மஹா ஸம்ப்ரோஷணம் சிறப்பாக நடந்தது. மாலை, 3:30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவமும், இரவு, 7:00 மணிக்கு திருவீயுலா உற்சவமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டு சென்றனர்.