அஷ்டாஷ்ட பைரவ யாகம்
திருத்தணி:அகத்தீஸ்வரர் கோவிலில், அஷ்டாஷ்ட பைரவ மகா யாக பூஜை நேற்று நடந்தது.திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், அஷ்டாஷ்ட பைரவ மகா யாகம், நேற்று நடந்தது. விழாவை ஒட்டி கோவில் வளாகத்தில், வடுக பைரவ பெருமானுக்கு, 64 யாக குண்டங்கள் மற்றும் 64 வேதிகைகள் நிர்மாணித்து, 64 ஆதிசைவ சிவாச்சாரியார்களால், 64 பைரவ பெருமான்களுக்கு ஹோம ஆகுதிகள், பூஜைகள் காலை, 8:00 மணி முதல் மதியம், 2:30 மணி வரை நடந்தன. தொடர்ந்து, 64 கலசங்களும் ஊர்வலமாக கொண்டு சென்று, வடுக பைரவருக்கு புனித நீராட்டு விழா நடந்தது.தொடர்ந்து மூலவருக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு, காமாட்சி அம்மனுக்கு, நவகலச ஸ்தபனம் பூஜை, ஹோமம் நடந்தது.பைரவ யாகசாலை பூஜையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலுார் ஆகிய மாவட்டங்களில் இருந்து, ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வடுக பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.