உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறந்த ஓவியம்!

சிறந்த ஓவியம்!

அன்னை குருகுலத்தில் படிப்பை முடித்த இரு மாணவர்கள், குருவின் ஆசிக்காக காத்திருந்தனர். நீங்கள் இருவருமே எல்லாத் துறையிலும் தலைசிறந்து விளங்குகிறீர்கள். உங்களுக்கு ஒரு கடைசி பரீட்சை. அமைதி என்ற தலைப்பில் ஓவியம் வரைந்து என்னிடம் கொண்டு வாருங்கள். அதிலிருந்து உங்களில் சிறந்தவனை தேர்வு செய்கிறேன்! என்றார். முதல் மாணவன் வரைந்த ஓவியத்தில் மலைகளின் பின்னணியில் அழகான நீர்த்தேக்கம், மேலே பஞ்சுப்பொதியென வெள்ளை மேகங்களுடன் கூடிய நீலவானம், பார்த்த உடனே நீண்ட தியானத்திற்கு அமரத்தூண்டும் ஓர் அசாதாரண சூழ்நிலையின் பிரதிபலிப்பு தெரிந்தது. இரண்டாவது மாணவனின் ஓவியத்திலும் மலைகள் இருந்தன. தொலைவில் கருமேகங்களிலிருந்து விழும் மலைச்சாரல்கள், இடையே மின்னலின் ஒளிக்கீற்று, நுரைக்கும் நீரருவி, எந்நேரமும் இடிமுழங்கும் என்ற எதிர்பார்ப்புடன் கூடிய ஓவியம் அமைதி என்ற தலைப்பிற்கு புறம்பாக இருந்தது.

இரு ஓவியங்களையும் கண்ணுற்ற குருவின் முகத்தில் விடை கிடைத்த திருப்தி நிலவியது. கூர்ந்து நோக்கிய அவரது கண்களுக்கு இரண்டாவது ஓவியத்தில் நீரருவியின் பின்னால் கரிய பாறைகளின் வெடிப்புக்கிடையே ஒரு சிறிய மரக்கிளை தென்பட்டது. அதில் கூடு கட்டியிருந்த தாய்க்குருவி தான் சேர்த்து வைத்த தானியங்களை பசியோடு தன் குஞ்சுகளுக்குப் பகிர்ந்தளித்துக் கொண்டிருந்தது. அந்த ஓவியத்தை வரைந்த மாணவனை பாராட்டிய குரு, அமைதி நிசப்தத்தில் இல்லை என்பதை நீ உணர்த்திவிட்டாய். எந்த ஒரு சூழ்நிலையிலும் மனிதன் உட்பட சகல ஜீவராசிகளும் தன் அன்றாட வேலைகளை மனஅமைதியுடன் செயல்படுத்த முடிகிறதோ, அங்குதான் உண்மையான அமைதி நிலவுகிறது என அர்த்தம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !