உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 3 கோவில்களின் உண்டியல்களுக்கு சீல்: அறநிலைய துறை நடவடிக்கை!

3 கோவில்களின் உண்டியல்களுக்கு சீல்: அறநிலைய துறை நடவடிக்கை!

துரைப்பாக்கம்: துரைப்பாக்கத்தில் உண்டியல் உடைக்கப்பட்ட கோவில் உட்பட, மூன்று கோவில்களின் உண்டியல்களுக்கு, அறநிலையத் துறை அதிகாரிகள் "சீல்" வைத்தனர். துரைப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள செங்கழுநீர் விநாயகர் கோவிலில், கடந்த வாரம், உண்டியலில் இருந்த பணம் திருடுபோனது. இந்த நிலையில், நேற்று இந்த கோவிலில் ஆய்வு செய்த, அறநிலையத் துறை அதிகாரிகள், கோவிலின் உண்டியலுக்கு "சீல்" வைத்தனர். மேலும், துரைப்பாக்கம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள ஆழிகண்டேஸ்வரர் கோவில் மற்றும் துரைப்பாக்கம் பி.டி.சி., குடியிருப்பில் உள்ள கங்கையம்மன் கோவில் ஆகிய கோவில்களின் உண்டியல்களுக்கும் "சீல்" வைக்கப்பட்டது. தனியார் நிர்வாகங்களின் கீழ் உள்ள இந்த மூன்று கோவில்களையும் தனது கட்டுப்பாட்டில் எடுக்க, அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவில் உண்டியல்களில் அலாரம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். உண்டியல் பணம் குறித்து வரவு- செலவு கணக்குகள் பராமரிக்க வேண்டும்; இரவில் தனியாக காவலாளி நியமிக்க வேண்டும் என, கோவில்களுக்கு அறிவுறுத்தியிருந்தோம். அவற்றை பின்பற்றாத காரணத்தால், திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. இந்த மூன்று கோவில்களையும், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !