தேனி கோயில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்
கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள கோயில்களில், கந்த சஷ்டி விழா காப்பு கட்டுடன் துவங்கியது. தேனியில் கணேச கந்த பெருமாள் கோயில், பெத்தாஷி விநாயகர் கோயில், தீயணைப்பு நிலையம் எதிரில் உள்ள முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் சாமி கும்பிட்டு கந்த சஷ்டி விரதம் துவக்கினர். கம்பம்: கம்பராயப் பெருமாள், வேலப்பர், கவுமாரியம்மன் மற்றும் ஆதிசக்திவிநாயகர் கோயில்களில் கந்த சஷ்டிவிழா துவக்கத்தை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். முருகனுக்கு எடுக்கப்படும் விழாக்களில் சிறப்பானது கந்தசஷ்டியாகும். தமிழகம் முழுவதும் கந்தசஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படும். கம்பத்தில் நேற்று காலை கம்பராயப் பெருமாள் கோயில், வேலப்பர் கோயில், மாரியம்மன்கோயில் மற்றும் ஆதிசக்திவிநாயகர் கோயில்களில், கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதிகாலை முதல் முருகப் பெருமான் அலங்கரிக்கப்பட்டு, பல்வேறு சிறப்பு ஆராதனைகளும், அபிசேஷகங்களும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானின் அருள் பெற்றனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கட்டளைதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். வரும் 8 ந் தேதி சூரனை, முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்சம்ஹார நிகழ்ச்சியும், மறுநாள் வள்ளி தெய்வானையுடன் திருக்கல்யாணமும் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பர். அன்னதானம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் என்று விழாக் குழுவினர் அறிவித்துள்ளனர். கூடலூர்: கூடல் சுந்தரவேலவர் கோயிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் நேற்று துவங்கியது. ஏராளமான பக்தர்கள் விரதத்தை துவக்குவதற்காக காப்பு கட்டினர். இதற்கு முன்னதாக, சுவாமி சுந்தரவேலவருக்கு பாலபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது. தொடர்ந்து மகளிர் குழுவினரின் தெய்வீகக் கூட்டுவழிபாடு பிரார்த்தனை நடந்தது. சுந்தரவேலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது.