குசேலர் பகுதி-14
குசேலர் அங்கு நடப்பதையெல்லாம் பார்த்து நெகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். கண்ணபிரான் பேச ஆரம்பித்தார். வாழ்வில் யார் ஒருவனுக்கு நட்பு சரியாக அமைகிறதோ, அவன் வாழ்வில் உயர்நிலையை அடைவான். பள்ளிக்குப் போகிற சிறுவனுக்கு நன்றாகப் படிக்கும் மாணவனுடன் தொடர்பு ஏற்பட்டால் இவனும் சிறப்பாகப் படிப்பான். அதுபோல், நல்ல நண்பன் என்றால் யார் என்பதற்குரிய இலக்கணத்தை கண்ணபிரான் சொல்ல ஆரம்பித்தார்.வேதமறிந்த குசேலனே! ஒருவனிடம் செல்வம் நிறைந்திருந்தாலும், கல்வியறிவு மிகுந்திருந்தாலும் உன்னைப் போன்ற தவசீலர்களின் நட்பு இல்லாவிட்டால், அதனால் பயனில்லை. தவசீலர்களின் நட்பைக் கொண்டவனுக்கு பூமியும், பொன்னும், நல்லறிவும் தானாகவே வந்து சேர்ந்து விடும். ஒரு பேயிடம் பழகிய பிறகு, அதன் நட்பை விடுவதென்றால் கூட உண்மை நண்பனுக்கு மனம் கஷ்டப்படும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அப்படியிருக்க, உன்னைப் போன்ற உயர்ந்தவர்களின் நட்பு விட்டுப்போகுமானால் படும் வேதனையின் அளவைச் சொல்லவும் வேண்டுமோ! துன்பம் வரும் சமயத்தில் நண்பனைப் போல உதவ யாருண்டு! அப்படிப்பட்ட சமயங்களில் அவர்கள் நமக்கு நல்ல நூல்களிலுள்ள கருத்துக்களை எல்லாம் போதித்து நல்ல பாதையில் திருப்புவார்கள், என்ற கண்ணபிரான் மேலும் தொடர்ந்தார்.கேள் குசேலா! உலகிலேயே உயர்ந்த சாதனம் பொறுமை. அந்தப் பொறுமை உனக்கு மட்டுமே சொந்தம். பொறுமையுடையவன் ஒருவனுக்கு நண்பனாக அமைவது அவனது பிராப்தத்தை பொறுத்தது. அந்த பிராப்தம் எனக்கு கிடைத்திருக்கிறது. தகாதவர்களுடன் சேர்ந்தால் வாழ்க்கை அழிந்து போகும். நல்லவர்களின் நட்பு தேடினாலும் கிடைக்காத செல்வமாகும்.
அத்தகைய நட்பல்லவா எனக்கு கிடைத்திருக்கிறது! குசேலா! இன்னும் கேள்! அனைத்தையும் அறிந்தவர்களின் நட்பு மனிதனுக்கு பிறப்பற்ற நிலையாகிய முக்தியைத் தரும். தேவர்களால் தரப்படும் வரத்தை விட உயர்ந்த பலனைத் தரும். சரி..சரி...உன் பெருமையை பேச ஆரம்பித்தால், அதை சொல்லி முடிக்க உலகநாட்கள் போதாது. வந்தவனைக் கவனிக்காமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறேன். அதெல்லாம் இருக்கட்டும்! உன் கல்யாணம் சிறப்பாக நடந்ததா? உன் மனைவி குணவதியா? எது நிஜமோ அதன் மீது (பக்தி) மட்டும் நம்பிக்கை கொண்டவளா? நல்லதை மட்டுமே செய்பவளா? உன்னை நேசிப்பவளா? உன் வருமானத்துக்கு ஏற்ப செலவழிப்பவளா? சொன்னதைச் செய்து காட்டுபவளா? எவ்வளவு வறுமைக்கு ஆளானாலும் அதை மற்றவர்களிடம் சொல்லாதவளா? புகுந்த வீட்டாரைப் பற்றி சிறிதும் குறை சொல்லாமல் அவர்களை அனுசரித்து செல்பவளா? என்றார். ஒரு பெண்ணுக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதைக் கண்ணபிரான், குசேலரிடம் கேட்பதன் மூலம் உலகுக்கு எடுத்துக் கூறியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.அடுத்து குழந்தைச் செல்வங்களைப் பற்றி விசாரித்தார். குசேலா! உனக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்? அவர்களெல்லாம் கற்றவர் சபையில் தனித்துவம் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டாயா? அவர்கள் ஊரே போற்றுமளவு தங்கள் திறனை வளர்த்துக் கொண்டுள்ளனரா? குணவான்களா? என்றார். இதையடுத்து ஒரு மனிதனுக்குரிய முக்கிய கடமைகள் அனைத்தையும் குசேலர் கடைபிடிக்கிறாரா என்று விசாரித்தார். அவர் சொல்லப்போகும் அனைத்தையும் குசேலர் கடைபிடித்து வருகிறார் என்று தெரிந்தாலும் கூட அவை என்னென்ன என்பதை உலகத்தினர் தெரிந்து கொள்வதற்காக கண்ணன் கேட்கிறார்.
குசேலா! குழந்தைகளின் தேவைகளை எல்லாம் குறைவின்றி கொடுத்து வருகிறாயா? மதிய நேரத்தில் பசித்து வந்து உணவு கேட்பவர்களை நாராயணனாகக் கருதி உணவிடுகிறாயா? (இதில் இருந்து மதிய நேரம் அன்னதானம் செய்வது மிகச்சிறப்பானதென்று தெரிய வருகிறது) தினமும் பூஜை, புனஸ்காரங்களை அதிகாலையிலேயே செய்து வருகிறாயா? அதற்கு உனது உடல்நிலை இடம் தருகிறதா? (உடல்நிலை சரியில்லாதவர்கள் நீராடல் முதலியவற்றைச் செய்ய முடியாவிட்டாலும் மனதில் இறைவனை நினைக்க வேண்டும் என்பது புலப்படுகிறது) தினமும் இறைவனை மனதில் இருத்தி தியானம் செய்கின்றாயா? என்றார்.என் நண்பனின் மனம் தான் எவ்வளவு உயர்ந்தது? என்னை விசாரித்தான், குடும்பத்தை விசாரித்தான், இப்போது என் குணநலன்களை விசாரிக்கிறான், ஆஹா...என் மீது எவ்வளவு அன்பிருந்தால், இத்தனையையும் கேட்பான் என்று குசேலர் சிந்தித்துக் கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து கண்ணன் சொன்னார்.குசேலா! உன்னை நான் மறந்துவிட்டேன் என்று நினைத்துக் கொண்டாயோ! உன் ஊர்ப்பக்கமிருந்து யாராவது என்னைக் காண வந்தால், அவர்களிடம் உன்னை பற்றி விசாரிப்பேன். உன்னை நான் தினமும் நினைத்துக் கொள்வேன். சிநேகிதத்தின் தன்மையே அதுதான், எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், அவர்கள் ஒருவரை ஒருவர் மறக்க மாட்டார்கள். சூரியனின் ஒளி எங்கிருக்கிறதோ அதை நோக்கியே சூரியகாந்தி திரும்பும். அதுபோல், நானும் உன்னைப் பற்றிய நினைவை மறந்ததே இல்லை, என்றார்.அடுத்து ஊரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.குசேலா! நீ வசிக்கும் நாட்டில் அதிக மழை பெய்கிறதா அல்லது பெய்வதே இல்லையா? வயல்களில் கிளி, விட்டில் பூச்சிகளால் சேதமின்றி உள்ளதா? காடுகள் செழிப்பாக வளர்ந்துள்ளதா? திருட்டுப்பயம் இல்லாமல் இருக்கிறதா? என்றார்.