இஸ்கான் ஜெகனாதர் கோவிலில் இன்று கீதா ஜெயந்தி விழா
கோவை: கோவை, இஸ்கான் ஜெகனாதர் கோவிலில், இன்று கீதா ஜெயந்தி விழா நடக்கிறது. வேத இலக்கியங்களின் சாராம்சமாக விளங்கும் பகவத் கீதை, மனித வாழ்க்கையின் நோக்கத்தை தெளிவாக விளக்குகிறது. பள்ளிப் பருவத்திலேயே இதை கற்கும் மாணவர்கள், மனத்தூய்மையுடனும், நல்ல எண்ணங்களுடனும், சிறந்த பண்பாட்டுடனும் திகழ வழி ஏற்படுத்தப்படுகிறது. 5,000 ஆண்டுகளுக்கு முன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குருஷேத்திரப் போர்க்களத்தில், அர்ஜூனனுக்கு ஸ்ரீமத் பகவத் கீதையை உபதேசித்ததை நினைவுக் கூறும் வகையில், கீதா ஜெயந்தி விழா, உலகெங்கிலும் உள்ள கிருஷ்ணர் கோவில்களில், இன்று கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, கொடிசியா அருகேயுள்ள ஜெகனாதர் கோவிலில், அதிகாலை 4:30 மணி முதல் மஹாயாகம், கீர்த்தனம், பகவத் கீதை புத்தக வினியோகம், சிறப்பு ஆராதனை, பகவத்கீதை பாராயணம் மற்றும் உபன்யாசம், பிரசாத விருந்து போன்ற நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.