உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரிகாசம் செய்தாலும் பலன் தருபவர்!

பரிகாசம் செய்தாலும் பலன் தருபவர்!

விநாயகர் தன் மூஷிக வாகனத்தில் ஏறி சந்திர லோகம் சென்றார். பெருத்த உடம்பும், பெரிய காதும், நீண்ட ஒற்றைத் தந்தமும், தும்பிக்கையும், குட்டைக் கால்களுமாக இருந்த விநாயகரைக் கண்ட சந்திரன் ஏளனமாகச் சிரிக்கத் தொடங்கினான். இதைக் கண்ட விநாயகர், சந்திரா! நீ வெள்ளை நிறத்தில் இருப்பதால் தான் அனைவரும் உன்னை அழகன் என்று புகழ்கின்றனர். உனக்கு சுயஒளி கிடையாது. சூரியனின் ஒளியைக் கொண்டு தானே நீ பிரகாசிக்கிறாய் என்பதை மறந்து விட்டாய். மேலும், அழகற்றவர்களை பரிகாசமும் செய்கிறாய். எனவே இனி உன் அழகு போகட்டும். யார் உன்னைப் பார்த்தாலும் அவர்கள் துன்பத்திற்கு ஆளாவர், என சபித்தார். இதைக் கேட்ட சந்திரன் பயந்து போனான். தான் தோன்றிய பாற்கடலின் அடியில் போய் ஒளிந்து கொண்டான். உலகில் சந்திரன் இல்லாமல் இரவில் இருள் சூழ்ந்தது. சந்திரனால் வளரும் மூலிகைகள் உற்பத்தியாகாததால் உயிர்கள் நோயால் வாடின. தேவர்களும், ரிஷிகளும் மீண்டும் சந்திரன் வானில் ஒளிவீசிப் பிரகாசிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். பிரம்மா அவர்களிடம், விநாயகரை வழிபட்டால் பிரச்னை தீர்ந்து நன்மை உண்டாகும் என தெரிவித்தார். அதன்படியே, தேவர்கள் சந்திரனை அழைத்து வந்து விநாயகரை வழிபடத் தொடங்கினர். விநாயகர் நேரில் வந்தார். சந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் வணங்கினர். தன்னை மன்னிக்கும்படி சந்திரன் அவரிடம் வேண்டினான். இட்ட சாபத்தை அடியோடு விலக்காமல், தான் (விநாயகர்) அவதரித்த வளர்பிறை சதுர்த்தியன்று மட்டும் சந்திரனைப் பார்த்தால் தீங்குண்டாகும் என மாற்றம் ஏற்படுத்தினார். மூன்றாம்பிறை நாளில் நிலவைப் பார்த்தால் புண்ணியம் என்று கூறி சந்திரனுக்கு உயர்வும் உண்டாக்கினார். சந்திரனைத் தன் அன்பராக ஏற்றுக் கொள்ளும் விதத்தில் விநாயகர், தன் தலையில் நிலவைச் சூடிக் கொண்டு மகிழ்ந்தார். தேய்பிறை சதுர்த்தி நாளில் விரதமிருந்து தன்னை வழிபட்டால், சங்கடம் தீரும் என்றும், அந்த பூஜையின் இறுதியில் சந்திரனையும் பூஜிக்க வேண்டும் என விநாயகர் கட்டளையிட்டார். இதையே சங்கடஹர சதுர்த்தி என்கிறார்கள். பரிகாசம் செய்தாலும், தவறை உணர்ந்து திருந்தியவனுக்கும் வாழ்வு தரும் விநாயகரை வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தி நாளில் வணங்கி வாழ்வு பெறுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !