மாரியம்மன் கோவில் திருவிழா குண்டம் இறங்கிய பக்தர்கள்!
வால்பாறை: வால்பாறை தாய்முடி எஸ்டேட் கோவிலில் நடந்த திருவிழாவில், பக்தர்கள் பக்திபரவசத்துடன், பூக்குண்டம் இறங்கினர். வால்பாறை அடுத்துள்ள தாய்முடி 2ம் பிரிவு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 26ம் தேதி காலை 9.00 மணிக்கு அக்கினி சட்டி எடுத்தும், அலகு பூட்டியும் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பின்னர் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. * தாய்முடி எஸ்டேட் முதல் பிரிவு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்த விழாவில் கோவிலின் முன்பு பக்தர்கள் பூக்குண்டம் இறங்கினர். முன்னதாக அருளாளி குண்டத்தில் பூ உருண்டையை உருட்டிவிட்டு, அம்மனின் அருள் பெற்ற பின்னர், பக்தர்கள் பக்திபரவசத்துடன், குண்டம் இறங்கினர். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.