உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சக்கணக்கானோர் பூ மிதிக்கும் பாரியூர் குண்டம் விழா

லட்சக்கணக்கானோர் பூ மிதிக்கும் பாரியூர் குண்டம் விழா

கடையேழு வள்ளல்களில் முதலாமவர் பாரி. அவரது பெயராலேயே அமைந்தது பாரியூர். கோபிக்கு அருகில் உள்ள இந்த ஊர் முற்காலத்தில் மிகப்பெரிய பட்டணமாக இருந்துள்ளது. 13ம் நூற்றாண்டில் நிகழ்ந்த போரில் இது சிதைவு பட்டது. பாரி மன்னன் வாழ்ந்து, அரசாட்சி புரிந்தபோது, பறம்புமலையிலும் வசித்துள்ளார். "பராபுரி என்றிருந்த இவ்வூர், "பாரியூர் என மருவியதாக கூறுவர். பாரியூரில் அமைந்துள்ள மிகப்பிரம்மாண்டமான கோவிலில் அருள்பாலிக்கிறாள் கொண்டத்து காளியம்மன். இக்கோவிலுக்கு அருகிலேயே சிவபெருமான் அமரபணீஸ்வரராகவும், விஷ்ணு ஆதிநாராயணராகவும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் மார்கழி மாதம் துவங்கி சித்திரை வரையிலும் "பூ மிதித்தல் விழா தொடர்ந்து நடக்கும். இதில் புகழ் பெற்றது பாரியூர். இக்கோவிலில் அம்மன் சன்னதிக்கு எதிரே, 50 அடி நீளத்தில் பக்தர்கள் பூமிதிக்கும் குண்டம் அமைந்துள்ளது. குண்டத்தை உடைய அம்மன்- "கொண்டத்து காளியம்மன் என்று அழைக்கப்படுகிறாள். "குண்டம் என்பதே "கொண்டம் என்று மருவியது. அம்மன் சன்னதிக்கு அருகிலேயே அங்காளம்மன் சன்னதி உள்ளது.

அம்மன் சன்னதிக்கு முன்புறம் குதிரை வாகனமும், அருகிலேயே முனியப்ப சுவாமியும் உள்ளனர். பில்லி, சூனியம், பேய், பிசாசுத் தொல்லைகளில் இருந்து விடுபட, இவரை வணங்க வேண்டும். இவரது திருவடியில் வைத்து பூஜிக்கப்பட்ட எந்திரங்கள், மஞ்சள் கயிறு போன்றவை தீராதநோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. குண்டம் திருவிழா மொத்தம் 17 நாட்கள் நடக்கிறது. பூச்சாட்டுதலுடன் இவ்விழா துவங்குகிறது. குண்டம் இறங்கும் பக்தர்கள், அன்று முதல் விரதத்தை ஆரம்பிக்கின்றனர். பூச்சாட்டுதல் விழாவில் இருந்து 12ம் நாள் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. அன்று அம்மனை தரிசிக்க ஆனந்தமாக இருக்கும். ஜன., 7ம் தேதி காலை முதலே பெண்கள் கூட்டம் கூட்டமாக மேளதாளத்துடன் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தனர். பூச்சாட்டுதலில் இருந்து, 15ம் நாளான இன்று குண்டம் திருவிழா நடக்கிறது. முதல் நாள் இரவே குண்டத்தில், "கரும்பு என அழைக்கப்படும் கட்டைகளை அடுக்கி, கற்பூரம் ஏற்றி, நெருப்பு மூட்டுவர். குண்டம் நாளன்று காலையில், அம்மைக்கு அலங்காரம் செய்வித்து, பூஜாரிகள் முறையாக அம்மை அழைத்து, குண்டத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள, கருட கம்பத்தில் திருக்கோடி வைத்து குண்டத்துக்கு பூஜை செய்வர். அப்போது, அம்மையின் உற்சவ மூர்த்தியான, எழுந்தருள் நாச்சியம்மன் மேற்கு பார்த்து, இருகரம் ஏந்திய நிலையில், குண்டம் அருகே எழுந்தருள்வார். கள் குண்டம் இறங்குவர். நம் வாழ்வின் துன்பங்கள் அனைத்தும் இத்தீயிலிட்ட துரும்பாய் போக, குண்டம் திருவிழாவில் நாமும் பங்கேற்று, கொண்டத்து காளியம்மன் அருள்பெறுவோம்.

எட்டு கைகளுடன் கொண்டத்து காளி: பாரியூரில், கொண்டத்து காளியம்மன் மகிஷாசுரனை வதம் செய்து முடித்து, அமைதியாகி, சாந்தரூபமாக காட்சி தருகிறாள். அம்பாளின் முகம் சிரித்த முகமாக, பக்தர்கள் வேண்டும் வரத்தை அள்ளித் தர வல்லதாக காட்சி தருகிறது. வலது காலை மடித்து, இடக்காலை தொங்க விட்டிருக்கிறாள். மகிஷாசுரனின் தலையை, அம்மனின் இடதுகால் பூமியில் அழுத்தியிருக்கிறது. தேவியின் வலக்கை ஏந்தியிருக்கும் சூலாயுதம் அவனது மார்பை துளைக்கிறது. அஷ்ட கரம் உடையவளாய், தலையில் அக்னிகிரீடத்துடன் அன்னை அருள்பாலிக்கிறாள். அன்னையின் கருணைப் பார்வை வேண்டி காத்திருக்கும் பக்தர்களை, தனது அருட்பார்வையால் குளிர்விக்கிறாள். அன்னையின் எட்டு கரங்களும் எட்டு வித பொருட்களை கொண்டிருக்கின்றன. அன்னையில் வலப்புறம் உள்ள நான்கு கரங்களும் மேலிருந்து கீழாக, சூலாயுதம், டமாரம், கத்தி, கிளி வடிவில் வேதாளம் ஆகியவற்றை கொண்டிருக்கின்றன. அன்னையின் இடப்புறம் உள்ள நான்கு கரங்களிலும் மேலிருந்து கீழாக அக்னி சட்டி, கேடயம், மணி, கபாலம் ஆகியவை உள்ளன. அன்னையின் திருவுருவத்தை அப்படியே வர்ணிக்கும் ஸ்லோகம் ஒன்று உள்ளது.  ஸ்யாமாபாம் ரக்த வஸ்த்ராம்; ஜுவலன சிகையுதாம்; அஷ்ட ஹஸ்தாம்; த்ரிநேத்ராம்; சூலம், வேதாள, ஹட்கம், டமர்க சகிதம்; வாமஹஸ்தே கபாலம், அன்யே கண்டாம்து, ஹேடாம், வன்னி ஹஸ்தாம், சுதம்ஸ்ட்ராம்; சாமுண்டாம்; பீமரூபாம் புவன பயஹரீம், பத்ரகாளிம் நமஸ்தே, என்பது அந்த ஸ்லோகம். "ஜுவாலையை தலையில் ஏந்தி, சிவப்பு நிற ஆடையை அணிந்து, எட்டு கரங்களிலும் எட்டு வித பொருட்களையும் கொண்ட சாமுண்டீஸ்வரியே, உனது விஸ்ரூப தரிசனத்தை கண்டு உலகமே நடுங்குகிறது. பத்ரகாளியே உன்னை வணங்குகிறேன் என்பதே, இதன் அர்த்தம்.

பாரியூர் கோவில் விழா நிகழ்ச்சிகள்:

ஜனவரி 9: குண்டம் இறங்குதல், சிம்ம வாகன காட்சி.
10ம் தேதி: மாலை 4 மணி திருத்தேர் பவனி.
11ம் தேதி: இரவு மலர் பல்லக்கு
12ம் தேதி: கோபியில் தெப்போற்சவம்
13, 14ம் தேதி: கோபியில் மஞ்சள் நீர் உற்சவம்.
15, 16ம் தேதி: புதுப்பாளையத்தில் மஞ்சள் நீர் உற்சவம்.
17, 18ம் தேதி: நஞ்சகவுண்டன் பாளையத்தில் மஞ்சள் நீர் உற்சவம். 17ம் தேதி இரவு, அம்மன் திருக்கோவில் வந்தடைதலுடன், மறுபூஜை.

2 நாளாக குவிந்த பக்தர்கள் கூட்டம்: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இன்று குண்டம் இறங்கும் விழா நடக்கிறது. கடந்த இரு வாரமாக விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நேற்று முன்தினம் மதியம், 2 மணி முதல் பாரியூரில் கோவில் வரிசையில் நிற்க துவங்கினர். விடிய, விடிய கொட்டும் பனியில் இவர்கள் காத்திருந்து, இன்று அதிகாலை குண்டம் இறங்க உள்ளனர். ஆண்டாண்டு காலமாக கூடும் இந்தக் கூட்டத்தை பார்க்கையிலேயே, பாரியூர் அம்மனின் எல்லையில்லா அருட்கடாட்சம் நமக்கு புலனாகிறது. மகிஷாசுரனை வதம் செய்து உலகைக் காத்த அந்த பூலோக நாயகியின் அருட்பார்வை கிடைக்க வேண்டி குண்டம் இறங்கும் பக்தர்கள், தங்களுக்குள் ஒரு புத்துணர்வு உண்டாகுவதை பெருமிதத்துடன் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !