உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் ருத்ரயாகம்?!

ராமேஸ்வரம் கோயிலில் ருத்ரயாகம்?!

ராமேஸ்வரம்: முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டி, அவரது தோழி சசிகலா தரப்பினர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ருத்ர ஜெப யாகம் நடத்தியதாக தெரிய வந்துள்ளது. ராமநாதசுவாமி சன்னதி அருகில் நேற்று, இரு கும்பம், 121 புனித தீர்த்த கலசங்களுடன், ருத்ர ஜெப யாகம், 2 மணி நேரம் நடந்தது; மயிலாடுதுறை சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில், 31 வேத விற்பன்னர்கள் பங்கேற்றனர். சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த தொழில் அதிபர் பாபாசங்கர் (சொந்த ஊர் தஞ்சாவூர்) மற்றும் உறவினர்கள் நடத்தினர். பொதுவாக சுவாமி சன்னதி அருகில், கோயில் குருக்களை தவிர, பிற சிவாச்சாரியார்கள் பூஜை நடத்த அனுமதி இல்லை; ஆனால், உயர் அதிகாரிகளின் உத்தரவால், சன்னதி அருகே பூஜை நடத்த அனுமதிக்கப்பட்டது; மேலும், பாதுகாப்புக்காக போலீசாரும் ஆஜராகினர். ருத்ர ஜெப யாகம் நடத்தினால், நினைத்த காரியம் வெற்றியாகும் என்பது நம்பிக்கை. லோக்சபா தேர்தலில், முதல்வர் ஜெ., வென்று, பிரதமராக வேண்டி, அவரது தோழி சசிகலா ஏற்பாட்டில் மதுரை, ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, ராமேஸ்வரத்தில் யாகம் நடந்துள்ளது என, பாபாசங்கருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.

இதுகுறித்து, பாபா சங்கர் கூறியதாவது:
உலக நன்மைக்கும், தமிழகத்தில் மழை வேண்டியும், இந்தியா, இலங்கையில் உள்ள தேவார பாடல் பெற்ற, 276 கோயில்களில் யாகம் நடத்த திட்டமிட்டுள்ளோம்; இதுவரை, 37 கோயில்களில் நடத்தி உள்ளோம்; வேறு யாருக்காகவும் பூஜை நடத்தவில்லை. இதை பெரிது படுத்த வேண்டாம், என்றார். கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், உலக நன்மைக்காகபூஜை நடத்துவதாக கூறியதால் சுவாமி சன்னதி அருகே யாகம் நடத்த அனுமதித்தோம். இதற்கு, 5000 ரூபாய் வசூலிக்கப்பட்டது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !