நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் பிப்., 12ல் கும்பாபிஷேகம்!
குறிச்சி: ஈச்சனாரி கெம்ப் இண்டியா நாகசக்தி அம்மன் தியான பீடத்திற்கு, வரும் 12ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் பீடம் சார்பில், புதிய தியான பீடம், கெம்ப் இண்டியா பகுதியிலுள்ள நாகசக்தி அம்மன் நகரில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கும்பாபிஷேக விழா, பிப்., 10 மாலை 3.30 மணிக்கு, 501 தீர்த்த கலசங்களுடன், யானை ஊர்வலத்துடன் துவங்குகிறது. 12ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. தியானபீட நிறுவனர் சிவசண்முகசுந்தர பாபு சுவாமிகள் கூறுகையில், கோவிலில் 18 படிகளின் முடிவில், ஒருபுறம் வள்ளலாரும், மறுபுறம் சிரவை ஆதினம் ராமானந்த சுவாமிகளின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன் மண்டபத்தின் இடதுபுறத்தில் வள்ளுவர், போகரும், வலதுபுறம் புத்தர் மற்றும் ஷீரடி சாய்பாபாவின் உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பிரம்ம மண்டபத்தில், 16 அன்னபட்சிகளும், 12 ஜோதிலிங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கருவறைகளில், இடதுபுறம் நாக விநாயகரும், நடுவே நாகசக்தி அம்மனும், வலதுபுறம் நாகேஸ்வர மூர்த்திகளும் அமைக்கப்படுகிறது. பக்தர்கள், தாங்களே பூஜை செய்யலாம். அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தவே, இத்தியான பீடம் அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.