தை அமாவாசையில் மூதாதையருக்கு திதி!
மேட்டுப்பாளையம்: தை அமாவாசையை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் நுாற்றுக்கணக்கானவர்கள் நீண்ட வரிசையில் நின்று, மூதாதையர்களுக்கு திதி கொடுத்தனர். இறந்த முன்னோர்களுக்கு, புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை, தை அமாவாசை மற்றும் அவர்கள் இறந்த நாளில் திதி கொடுப்பது வழக்கம். இறந்த நாளில் திதி கொடுக்காதவர்கள், மகாளய மற்றும் தை அமாவாசை அன்று திதி கொடுப்பர். சிவன் கோவில், மயானம் மற்றும் புண்ணிய நதி ஆகிய மூன்றும் ஒன்றாக இருக்கும் இடத்தில் திதி செய்வது, மிகவும் சிறப்பாகும். அந்த அடிப்படையில் மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து இந்து சமுதாய நந்தவனம், மூன்று பொருந்தும் இடத்தில் அமைந்துள்ளது. மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகரில் சிவன் கோவிலும், அதன் கீழே மயானமும், அதற்கும் கீழே வற்றாத ஜீவநதி பவானி ஆறும் ஓடுகிறது. அதனால், இந்த இடத்தில் திதி செய்வதை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். நேற்று தை அமாவாசையை முன்னிட்டு, இந்த நந்தவனத்தில் நுாற்றுக்கணக்கானவர்கள், நீண்ட வரிசையில் நின்று, இறந்தவர்களுக்கு திதி கொடுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை, அனைத்து இந்து சமுதாய சங்கத்தினர் செய்திருந்தனர்.