வடமாத்தூர் மதுரநாதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா
செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் வடமாத்தூர் கிராமத்தில் அருள்மிகு மதுரநாதீஸ்வரர் கோவில் புனராவர்த்தன் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) காலை நடைபெறுகிறது. இத்திருக்கோவில் நூறு ஆண்டுகளுக்கு முன் நிலத்தில் ஏர் உழும்போது தட்டுப்பட்ட சிலை போன்ற கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. இக்கோவிலில் உள்ள சுயம்பு மாணிக்க விநாயகர் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை அப்பகுதி பக்தர்கள் நேரில் பார்வையிட்டு சுவாமியை தரிசித்து வந்துள்ளனர். இத்திருக்கோவில் ரூ.1 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி வெள்ளிக்கிழமை முதல் கோ பூஜை, தன பூஜை, மஹாபூர்ணாஹுதி, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூன்றாம் யாகசாலை பூஜை, நான்காம் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு பரிவார சகிதம் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மதுரநாதீஸ்வரர் மஹா கும்பாபிஷேம் நடைபெற உள்ளது.