சங்கமேஸ்வரர் கோவிலில் பரிகார மண்டபம் கட்டும் பணி தீவிரம்!
பவானி: பவானி, சங்கமேஸ்வரர் கோவில் பின் பகுதியில் பக்தர்களின் வசதிக்காக, புதிய பரிகார மண்டபம் கட்டும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. பவானி சங்கமேஸ்வரர் கோவில், தென்னகத்தின் காசி என அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் பின்புறம், மூன்று நதிகள் ஓடுவதால், அங்குள்ள காவிரியை கூடுதுறை என்பர். இங்கு ஆண்டு முழுவதும் உள்ளுர், வெளியூர் பக்தர்கள் வருகை தந்து, முக்கூடல் சங்கமத்தில் புனித நீராடி, தங்கள் குடும்பத்தில் இறந்த முதியோர்களுக்கு தர்பணம், திதி, பரிகாரம் போன்றவைகளை செய்து, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக, கூட்டம் அதிகமாக காலங்களில், ஏற்கனவே உள்ள பரிகார மண்டபத்தில் இடநெருக்கடி அதிகம் ஏற்படுவதால், காளகஸ்திரி மண்டபம், பழைய பரிகார மண்டபம் ஆகியவைகள் இடித்து கட்ட முடிவு செய்தனர். இதன்படி, அப்பகுதியில், மிக பெரிய அளவிலும், பிரமாண்டமான முறையில் 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஒரே நேரத்தில், 150 பேர் அமர்ந்து, பரிகாரம் செய்யும் வசதிகள் கொண்ட, 55 அடி நீளம், 60 அடி அகலம் கொண்ட, மிக பிரமாண்டமான பரிகார மண்டபம் கட்ட தீர்மானித்தனர். அரசின் அனுமதி பெற்று, புதிய பரிகார மண்டபம் கட்டுவதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன், பவானி எம்.எல்.ஏ., நாராயணன், நகராட்சி தலைவர் கருப்பணன், பவானி தொழில் அதிபர் பழனிசாமி, அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணராஜ் மற்றும் சங்கமேஸ்வரர் கோவில் அதிகாரிகள், ஆன்மிகவாதிகள் ஆகியோர்கள் முன்னிலையில் பூமி பூஜையுடன், பணிகள் துவங்கியது. தற்போது, இப்பணிகள், 60 சதவீத நிறைவு பெற்றுள்ளது. தற்போது பரிகார மண்டபத்தின் மேல் பகுதியில், சுவாமி சிற்ப பணிகள் நடந்து வருகிறது. பக்தர்களுக்கு தேவையான தண்ணீர், மின்சார வாதி, கழிப்பிடம் போன்ற வசதிகள் செய்ய ஆலோசனை செய்யப் படுகிறது. மிக விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.