பங்குனி உத்திர திருவிழா: பால்குடம் எடுத்த பக்தர்கள்
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, 80 பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து, வேலாயுதசாமியை வழிப்பட்டனர். பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கோவில் பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபண்ண மன்றாடியார் மற்றும் பக்தர்கள் 80 பேர் மாலை 6.00 மணியளவில் பால்குடம் எடுப்பதற்கு, கோவில் அடிவாரத்தில் உள்ள ராஜகணபதி கோவிலிலுக்கு வந்தனர். அங்கு, பூஜையை முடித்துவிட்டு, பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். உடன் மாமாங்கம் பத்ரகாளியம்மன் கோவில் காவடி மற்றும் மேள தாளம் முழங்க மலை கோவிலை சுற்றி பால்குடத்துடன் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பின், மலை மேல் சென்று, வேலாயுதசாமிக்கு அபிஷேக பூஜை நடந்தது. இதில், பக்தர்கள் கொண்டு வந்த பால்குடத்தில் இருந்த பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். பின், வேலாயுதசாமிக்கு ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வேலாயுதசாமியை வழிபட்டனர். பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர், சஷ்டிகுழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்தனர். சிவலோகநாதர் கோவில்கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, முருகனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இதில், பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், அரிசி மாவு, சந்தனம், குங்குமம் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், முருகருக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.