தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களில்.. மழை வேண்டி யாகம்!
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களில், நேற்று, மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. இதில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, பருவமழை பொய்த்துப் போனது. நீர்நிலைகள் வறண்டு விட்டன. காட்டில் உள்ள விலங்குகள் கூட, நீரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில், குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. இதனால், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
அதிகாலையில்... : இந்நிலையில், அதிக வருவாய் வரும் கோவில்களில் மழை வேண்டி, நேற்று, யாகம் நடந்தது. வழக்கமாக, காலை, 6:00 மணிக்கு, கோவில் நடை திறப்பது வழக்கம். நேற்று சிறப்பு யாகம் நடத்தப்படுவதை தொடர்ந்து, 5:00 மணிக்கே, நடை திறக்கப்பட்டது. முதல் கட்டமாக, கணபதி ஹோமம் நடந்தது. பின், யாகம் துவங்கியது. யாக குண்டத்தில், வெட்டிவேர், பொரிகடலை, நெல், நவதானியம், பேரிச்சம்பழம், ரோஜா பூ இதழ், ஆலமர குச்சி, அரச மர குச்சி, எருக்கம் குச்சி போன்றவற்றை போட்டு, புகை மண்டலம் எழுந்த போது, பக்தர் கள் வானத்தை பார்த்து வணங்க துவங்கினர். சிவாலயங்களில், திருமுறைகளையும், பெருமாள் கோவில்களில், பிரபந்த பாடல்களையும் பாடினர். சிவன் கோவில்களில் நந்தி சிலைக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. யாகம் நடந்த அனைத்து கோவில்களிலும், மழை வேண்டி இசைக்கப்படும், "அமிர்தவர்ஷினி ராகத்தில், நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன. பின், கோவில்களில் உள்ள தொட்டிகளில் நீர் நிரப்பி, நந்தியை குளிர்வித்தனர். அறநிலையத்துறை கோவில்களில் பணிபுரியும், சிவாச்சாரியர் மற்றும் பட்டாச்சாரி யர்கள், யாகத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். யாகத்துக்கு ஏற்படும் செலவை, அந்தந்த கோவில் நிதியிலிருந்து எடுத்துக் கொள்ள, சிறப்பு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கோவிலிலும், நேற்று நடந்த யாகத்துக்கு, தலா, 5,000 ரூபாய், செலவாகி இருக்கும் என, சிவாச்சாரி யர்கள் தெரிவித்தனர்.
நெல்லையப்பர் கோவில் : சென்னையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், வடபழனி முருகன், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்; திருச்சி, வயலூர் முருகன்; சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, பகவதியம்மன் கோவில்; திருவள்ளூர் வேதபுரீஸ்வரர் கோவில்; திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்; கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர், ஸ்ரீசாரங்கபாணி; திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில்; சீர்காழி, நாகேஸ்வரமுடையார் கோவில்; ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில்; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில், நேற்று, மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.