உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாபங்களைப் போக்கும் ருத்ராக்ஷம்!

பாபங்களைப் போக்கும் ருத்ராக்ஷம்!

ருத்ராக்ஷம் அணிபவர்கள் சுத்தமாக இருக்கவேண்டுமே, எங்களுக்கு ஆசாரம் எல்லாம் கிடையாது. நாங்கள் அதை எப்படி அணிவது! என்று பலர் குழம்பித் தவிக்கின்றனர். இது பற்றி முன்னோர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஸுப்தே பீதே ஸதா காலம்
ருத்ராக்ஷம் தாரயேன் நர:

என்று ருத்ராஜ ஜாபா லோப உபநிஷத்தில் ருத்ர பகவான் கூறுகிறார். மனிதர்கள் <உறங்கும்போதும், நீர் முதலானவற்றைப் பருகும்போதும் எல்லாக் காலத்திலும் ருத்ராக்ஷம் அணிந்து கொள்ளலாம். நன்கு குளித்து சுத்தமாக உள்ளவர்கள்தான் சோப் பயன்படுத்த வேண்டும் என்று யாரேனும் சொல்வார்களா? அதுபோல வியாதி இல்லாதவர்கள்தான் மருந்து சாப்பிட வேண்டும் என்று பேசுபவர்கள் உண்டா? அதுபோலத்தான் சுத்தபத்தமாக உள்ளவர்கள்தான்  ருத்ராக்ஷம் அணிய வேண்டும் என்பதும். ஆயினும் மருந்துக்குப் பத்தியம் எப்படி அவசியமோ அதுபோல ருத்ராக்ஷம் அணிபவர்கள் மதுபானம் அருந்துதல், புலால் உண்ணுதல் போன்ற தீய வழக்கங்களைக் கைவிடவேண்டும். அப்படி இருப்பதுதான் சுத்தபத்தம்.

ருத்ராக்ஷத்தின் மீது பட்ட தண்ணீர் நம் மீது படுவதாலும், ருத்ராக்ஷம் ஊற வைத்த நீரைத் தனியே அடிக்கடி பருகுவதாலும் ரத்த அழுத்தம், ஹைபர்டென்ஷன் போன்ற வியாதிகள் தீர்கிறது என்று பல விஞ்ஞானிகள் ஆராய்ந்து கூறியுள்ளனர். ருத்ராக்ஷ ஜாபாலோப உபநிஷதம் ருத்ராக்ஷத்தின் பெருமைகளை காலாக்னி ருத்ரனாகிய சிவபெருமானின் வாய் வழியாகவே வழங்குகின்றது-

ஸம்ஹார காலத்தில் ஆயிரம் தேவவர்ஷங்கள் என் விழிகள் திறந்திருந்தன. அவற்றிலிருந்து பூமியில் விழுந்த கண்ணீர்த் துளிகளிலிருந்து ருத்ராக்ஷ மரங்கள் தோன்றின என்று புஸூண்ட மகரிஷிக்கு மேற்படி உபநிஷத்தில் சிவபெருமான் உபதேசிக்கிறார்.

இறைவா உனது கடைக்கண் கருணைப் பார்வை என் மீது விழாதா! என்றுதானே பலர் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் ஈஸ்வரனுடைய கருணைக் கண்களிலிருந்து தோன்றிய ருத்ராக்ஷத்தை அணிவதற்கு ஆலோசித்தால் அவனுடைய அருளைப் புறக்கணிப்பதாகத் தானே அர்த்தம்?

விஷயம் தெரிந்தவர்களாக நம்பப்படுகிற சிலர் கூட இறந்தவர்களுக்குச் செய்கிறசிரார்த்தம், திதி போன்ற காலங்களில் ருத்ராக்ஷம் அணிவதைத் தவிர்க்குமாறு கூறுகின்றனர். இதுவும் மிகவும் பிழையான கருத்து.

ஸ்நானே தானே ஜபேஹோமே
வைச்சதேவ கரார்ச் சனே பராயஸ்சித்தே
ததாஸ்ரார்த தீக்ஷாகாலே விசேக்ஷதே
என்கிறது தேவி பாகவதம். இதன் பொருள்- நீராடும்.

போதும், தானங்கள் செய்யும் போதும், ஜப ஹோமங்களின் போதும், அர்ச்சனை புரியும் போதும், பிராயச்சித்தமாகப் பரிகாரங்கள் செய்யும் போதும்,  தீக்ஷை பெறும் சமயத்திலும் ருத்ராக்ஷம் அணிவது விசேஷ பலன்களைக் கொடுக்கும் என்பதாகும்.

தீவினைகளைத் தீர்த்துக் கொள்ள எத்தனையோ வழிகள் முன்னோர்களால் கூறப்பட்டிருப்பினும் ருத்ராக்ஷம் அணிவது அவற்றுள் மிக எளியவழி. எப்படி சூரியனை இருள் நெருங்காதோ அது போல ருத்ராக்ஷம் அணிபவர்களைப் பாவம் அண்டுவதில்லை. இன்னும் ருத்ராக்ஷ மகிமையை சொல்லிக் கொண்டே போகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !