நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் 26ம் தேதி தேரோட்டம்!
நரசிங்கபுரம்: நரசிங்கபுரத்தில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வரும் 26ம் தேதி, தேரோட்டம் நடைபெற உள்ளது. கடம்பத்தூர் ஒன்றியம், நரசிங்கபுரத்தில் அமைந்துள்ளது மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில். இங்கு ஆனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. ஆனி பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா, வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 5:15 மணி முதல், 6:00 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். பின், இரவு 7;00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை 7:00 மணிக்கு சேஷ வாகனத்தில் சுவாமி திருவீதி நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்திலும், நாளை காலை 7:00 மணிக்கு சூர்ணாபிஷேகம் சப்பரத்தில் வேணுகோபால் திருக்கோலத்திலும் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலிக்கிறார்.