கடம்பாடி கோவிலில் இன்று தீமிதி உற்சவம்
மாமல்லபுரம் : கடம்பாடி, மாரி சின்னம்மன் கோவிலில், இன்று மாலை தீமிதி உற்சவம் நடைபெறுகிறது. மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி கிராமத்தில், அறநிலையத்துறையின் கீழ், மாரி சின்னம்மன் கோவில் உள்ளது. காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிவாசிகளுக்கு, குலதெய்வமாக இந்த அம்மன் விளங்குகிறாள். பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடி உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. ஆடி உற்சவம், 28ம் தேதி மாலை, அம்மனுக்கு காப்புக்கட்டி துவங்கியது. அன்று இரவு மற்றும் நேற்று காலை, சக்தி கரக வீதியுலா நடந்தது. அதைத் தொடர்ந்து, இன்று பகல் 12:00 மணி அளவில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெறும். மாலை 4:00 மணி அளவில், திருக்குளத்தில் காப்புக்கட்டி கங்கை நீர் எடுத்து, அம்மன் சன்னிதியில் அலகு நிறுத்தப்படும். பக்தர்கள், திருக்குளத்திலிருந்து பூங்கரகம் கொண்டு சென்று அம்மனை தரிசித்து, மாலை 6:00 மணி அளவில், தீ மிதிக்கின்றனர்.அதைத்தொடர்ந்து, உற்சவமூர்த்திகளை அலங்கரித்து, இரவு 8:00 மணி அளவில், வீதியுலா நடைபெறும்.